நீலகிரியில் தங்கையோடு சேர்ந்து பெண் பகீர் சம்பவம் | Ooty | Theft
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ளது நெலாக்கோட்டை. இங்கு கூவச்சோலை வீரப்பன் காலனியை சேர்ந்தவர் முகமது. தனியார் பள்ளியில் வாட்ச் மேனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மைமூனா. மே 16ம் தேதி முகமது வேலைக்கு சென்ற நிலையில் மைமூனா வீட்டில் தனியாக இருந்துள்ளார். வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்த போது முன்பக்க கதவு மூடப்பட்டு இருந்துள்ளது. வெளியில் இருந்து சத்தம் போட்டு அழைத்த நிலையில் எந்த பதிலும் வரவில்லை. பின்பக்க கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது வீட்டின் சமையல் அறையில் மைமூனா காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். மனைவியின் உடலைப் பார்த்து கதறி அழுத முகமது நெலாக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். மைமூனா உடலை மீட்ட போலீசார் ஊட்டி அரசு அஸ்பிடலுக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆரம்பத்தில் குக்கர் வெடித்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் மைமூனா கொலை செய்யப்பட்டது உறுதியானது. நான்கு தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் முகமதுவின் மருமகள் சம்பவம் நடந்த நாளான்று கூவச்சோலை வந்தது தெரியவந்தது. பந்தலூர் அருகே 9வது மைல் பகுதியில் முகமது மகன் சர்புதீன் வீடு உள்ளது. சர்புதீன் வெளிநாட்டில் வேலைபார்க்கும் நிலையில் அவரது கைருன்னிஷா குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கைருன்னிஷா தங்கை அஷீனா. இவரது கணவர் நஜாமுதீன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நஜாமுதீனை ஜாமினில் எடுக்க பணம் இல்லாத நிலையில் சர்புதீன் குடும்பத்திடம் உதவி கேட்டுள்ளனர். உதவி கேட்டும் பணம் கிடைக்காத நிலையில் கைருன்னிஷாவும், அஷீனாவும் சேர்ந்து மைமூனாவை தீர்த்து கட்ட திட்டம் போட்டனர். இருவரும் சம்பவம் நடந்த நாளன்று மைமூனா வீட்டுக்கு சென்று உதவி கேட்டுள்ளனர். அப்போது மைமூனா இருவருக்கும் டீ போட்டு கொடுத்துள்ளார். தன்னால் எந்த உதவியும் செய்ய முடியாது என கூறி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கைருன்னிஷா மாமியார் என்றும் பார்க்காமல் மைமூனா கழுத்தில் துண்டு போட்டு நெறித்துள்ளார். பின்னர் தனது தங்கை அஷீனாவுடன் சேர்ந்து குக்கர் மூடியால் அடித்து கொன்றுள்ளனர். மைமூனா கழுத்தில் இருந்த 6 சவரன் தங்க நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். சந்தேகம் வரக்கூடாது என செல்போனையும் வீட்டுக்கு முன்னால் புதைத்துள்ளனர். மாலை முகமது வீட்டுக்கு திரும்ப வரும் போது அவரையும் தீர்த்து கட்ட திட்டம் போட்டிருந்தனர். மைமூனா நகைகளை கொள்ளையடித்த பின் வீட்டில் கியாஸ் சிலிண்டரை திறந்துவிட்டு சென்றுள்ளனர். முகமது வீட்டுக்கு திரும்பியதும் ஸ்விட்ச் போட்டால் சிலிண்டர் வெடித்து முகமது, மைமூனா இருவரும் இறந்தது போல மாற்றிவிடலாம் என்பதை இருவரது திட்டம். நல்வாய்ப்பாக முகமது அசம்பாவிதம் ஏற்படாமல் தப்பினார். இப்போது கைருன்னிஷாவும், அவரது தங்கை அஷீனாவும் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கையின் கணவரை காப்பாற்ற தனது கணவரின் குடும்பத்தையே தீர்த்துகட்ட மருமகள் திட்டம் போட்ட சம்பவம் நீலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.