லடாக்கின் சியாச்சின் எல்லையில் ராணுவ வீரர்கள் உற்சாகம் Operation Meghdoot| 1984 Army Operation | Si
இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லடாக்கில் அமைந்துள்ளது சியாச்சின். உலகின் மிக உயரமான போர்க்களமாக கருதப்படும் இந்த பகுதி, மனிதர்கள் வாழ தகுதியற்றதாக அமைந்துள்ளது. கடும் பனிப்பொழிவு, ஆக்சிஜன் பற்றாக்குறை, புற ஊதாக்கதிர் பாதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால், இங்கு செல்லும் பலருக்கும் மூச்சுத்திணறல், ரத்த அழுத்தம் அதிகரிப்பு என பல பிரச்னைகள் ஏற்படும். இந்தியா - பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த பகுதியை, 1949 கராச்சி ஒப்பந்தப்படி, இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடாமல் பொது இடமாக அறிவித்தன. ஆனால், 1970களில் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் இந்த பகுதியில் ஊடுருவுது அதிகரித்தது. இதை அறிந்த மத்திய அரசு, அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. 1978 முதல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் அங்கு பறக்க துவங்கின. பாகிஸ்தான் படைகள் ஊடுருவி, அந்த பகுதியை ஆக்கிரமிக்க திட்டமிட்டது தொடர் கண்காணிப்பில் தெரிந்தது. இதையடுத்து, லெப்டினென்ட் ஜெனரல் மனோர்லால் சிப்பர், லெப்டினென்ட் ஜெனரல் பிஎன் ஹூன், மேஜர் ஜெனரல் ஷிவ் சர்மா அடங்கிய ராணுவப் படை, 1984 ஏப்ரல் 13ம் தேதி, கடல் மட்டத்தில் இருந்து 20,000 அடி உயரத்தில் அமைந்துள்ள சியாச்சின் கிளேசியர் பகுதியில் இந்திய தேசிய கொடியை நட்டு அதை நம் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் மேகதுாத் என பெயரிடப்பட்டது. அப்போது ஒருங்கிணைந்த ஜம்மு - காஷ்மீரின் ஒரு அங்கமாக இருந்த இப்பகுதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு நவடிக்கையில் இருந்து மீட்கப்பட்டது. இதன் மூலம், காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அப்போது முதல், கடும் குளிர் மற்றும் மோசமான சூழலிலும், நம் ராணுவ வீரர்கள் சியாச்சின் எல்லையில் தொடர்ந்து பாதுகாப்பு, ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆபரேஷன் மேகதுாத், உலகின் மிக உயரமான போர்க்களத்தில் நடந்த ராணுவ நடவடிக்கை என இன்றளவும் போற்றப்படுகிறது. ஆண்டு தோறும் இந்நாளில் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் நிகழ்வு நடக்கிறது. அந்த வகையில், சியாச்சின் எல்லையில் 41ம் ஆண்டு ஆபரேஷன் மேகதுாத் நிகழ்வை ராணுவ வீரர்கள் கொண்டாடினர்.