விஜய் கட்சியுடன் OPS கூட்டு; ரூட் மாறிய கதை |ops alliance with tvk vijay |eps vs ops | tn election
அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், விஜயுடன் கைகோர்க்க இருப்பதாகவும், இதற்காக மதுரை மாநாட்டில் புதிய கட்சி துவங்க இருப்பதாகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் தன் ஆதரவாளர்களுடன் தனித்து செயல்படுகிறார். அதிமுகவுக்கு எதிராக சட்டப் போராட்டங்கள் நடத்தி பலன் இல்லை; கட்சியில் மீண்டும் சேரும் முயற்சிகளும் கைகூடவில்லை. லோக்சபா தேர்தலில், பாஜ கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டு தனியாக போட்டியிட்டது. ராமநாதபுரம் தொகுதியில், பாஜ கூட்டணி சார்பாக, அதிமுக வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார் பன்னீர்செல்வம். இரட்டை இலை சின்னத்தால் முதல்வர் பதவிக்கு வந்தவர் அந்த சின்னத்தை எதிர்த்தே போட்டியிட்டது அதிமுக பொதுச்செயலாளர் உள்ளிட்ட தலைவர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, அவரை மீண்டும் அதிமுகவில் சேர்க்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். ஆனால், பன்னீர்செல்வத்துடன் கூடவே இருக்கும் அவரது ஆதரவாளர்கள், அதிமுகவில் இணைந்தால் தான் எதிர்காலம் என்பதால், எப்படியாவது மீண்டும் சேர துடிக்கின்றனர். சமீபத்தில் காஞ்சிபுரம் கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகி மதுராந்தகம் ரஞ்சித்குமார், காலில் கூட விழுகிறோம்; ஒன்றிணையுங்கள். அனைவரையும் சேர்த்துக் கொண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளுங்கள் என்று பழனிசாமிக்கு கோரிக்கை வைத்தார். ஆனால், அதை பழனிசாமி கண்டுகொள்ளாமல், பாஜவுடன் கூட்டணி அமைத்து, தேர்தல் பணிகளை துவக்கி விட்டார்; தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.