தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர்களையும் விடமாட்டோம் | Pahalgam terror attack | Rajnath singh
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய கொடூர தாக்குதல் நாட்டையே அதிர்ச்சியல் ஆழ்த்தி உள்ளது. சவுதி பயணம் சென்றிருந்த பிரதமர் மோடி அவசர அவசரமாக நாடு திரும்பினார். டில்லியில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஆலோசனை நடத்தினார். சம்பவம் நடந்த பைசரான் பகுதிக்கு சென்ற அமித் ஷா, அங்கு செய்துள்ள பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்தார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், டில்லியில் முப்படை தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி இருந்தார். பின்னர் டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை பற்றி பேசினார். ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிவைத்து கோழைத்தனமான தாக்குதலை நடத்தி உள்ளனர். இதில் நாம் பல அப்பாவி உயிர்களை இழந்து மிகவும் துயரத்தில் இருக்கிறோம். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியை மீண்டும் சொல்ல விரும்புகிறேன். பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கொண்டுள்ளோம். அதனால் அதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். பஹல்காம் தாக்குதலை நடத்தியவர்களுக்கு விரைவில் உரத்த, தெளிவான பதிலடி கிடைக்கும். அவர்கள் மட்டுமல்ல, தாக்குதலுக்கு பின்னால் இருந்து மூளையாக செயல்பட்டவர்களையும் வேட்டையாடுவோம் என நாட்டுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் என்றும் பேசினார்.