காஷ்மீர் எல்லையில் வாலாட்டுகிறது பாகிஸ்தான் ராணுவம் | Pakistan | Poonch Sector | Indian Army
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. எல்லை தாண்டியதாக இந்திய பாதுகாப்பு படை வீரரையும் பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்துள்ளனர். அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையிலும், அவரை விடுவிக்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது. தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் வீடுகளை நம் பாதுகாப்பு படையினர் நொறுக்கி வருகின்றனர். இருதரப்பும் ஏவுகணை சோதனை நடத்தி வருவதால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து 4வது நாளாக நள்ளிரவில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். குப்வாரா மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஏற்கனவே நடந்த தாக்குதலின் போதும் நமது ராணுவம் பதில் தாக்குதல் கொடுத்தது. பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது இதுவே முதல் முறை. இந்த சண்டையில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதம், காயம் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.