தோண்டப்பட்ட 6 வருட பின்னணி - வெளியான பகீர் தகவல் | Palladam case | Tirupur police
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் மொத்த தமிழகத்தையும் உலுக்கியது. சேமலைகவுண்டம்பாளையம் தோட்டத்து வீட்டில் 76 வயதான விவசாயி தெய்வசிகாமணி, அவரது மனைவி அமலாத்தாள், இவர்களது மகன் செந்தில் குமார் அடித்தும் வெட்டியும் கொல்லப்பட்டனர். இந்த கொடூர கொலைகளை செய்த கும்பல் வீட்டில் இருந்த நகைகள், செந்தில்குமாரின் செல்போனை கொள்ளையடித்து விட்டு தப்பியது. முதல்கட்ட விசாரணையில் முன்பகைக்காக இந்த கொலை நடக்கவில்லை என்று போலீசார் கூறினர். 15 ஏக்கர் தோட்டத்தில் தம்பதி வசித்து வந்ததால், வீட்டில் பெரிய அளவில் நகை, பணம் இருக்கும் என்று கருதி கொள்ளையடிக்கும் திட்டத்தில் வந்த மர்ம கும்பல் 3 பேரையும் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். ஆனால் இந்த கோணத்தில் விசாரித்து வேகமாக முன்னேறி சென்ற திருப்பூர் தனிப்படை போலீசாருக்கு மீண்டும் ஏமாற்றமே கிடைத்துள்ளது. தோட்டத்தில் கிடைத்த சிகரெட்துண்டு, ம்து பாட்டிலை ஆய்வு செய்த போது 3 பேரின் இறப்புக்கு துக்கம் விசாரிக்க வந்த உறவினர் வீசி சென்றது என தெரியவந்தது. இதனால் வழக்கை அடுத்து கட்டத்துக்கு எடுத்து செல்ல எந்த தடையமும் கிடைக்காமல் போலீசார் திணறினர். இந்த கொடூர சம்பவத்தில் அமலாத்தாளும், செந்தில்குமாரும் ஸ்பாட்டிலேயே இறந்து விட்டனர். ஆனால் கும்பல் சென்ற பிறகும் தெய்வசிகாமணி உயிருடன் தான் இருந்தார். காலையில் சவரத்தொழிலாளி வீட்டுக்கு வந்த போதும் அவருக்கு உயிர் இருந்தது. அதன் பிறகு போலீஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது தான் அவர் இறந்தார். கொள்ளையடிக்க வந்த கும்பலாக இருந்தால் அனைவரும் இறந்ததை உறுதி செய்து விட்டு தான் ஸ்பாட்டை விட்டு காலி செய்வார்கள். அதே போல் இரும்பு ராடால் அடிப்பதோடு மட்டுமின்றி நைலான் கயிறு, சேலை அல்லது துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்வது அவர்களது பழக்கம். பல்லடத்தில் கொல்லப்பட்ட மூவரின் கழுத்தும் நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இல்லை. இது தனிப்படை போலீசாரை குழப்பத்தில் ஆழ்த்தியது. இதனால் மொத்தமாக பாணியை மாற்றிய போலீசார் வேறு கோணத்தில் விசாரிக்க ஆரம்பித்தனர். கொலையான 3 பேரின் பின்னணி பற்றி நுணுக்கமான அலசி எடுத்தனர். தெய்வசிகாமணி, அமலாத்தாள் தம்பதிக்கு பெரிதாக யாரிடமும் பகை இல்லை. கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த செந்தில்குமார் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு பைனான்ஸ் தொழில் நடத்தி வந்துள்ளார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த தொழிலை கைவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவர்களது தோட்டத்தை தூத்துக்குடியை சேர்ந்த ஒருவருக்கு குத்தகைக்கு விட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் தகராறில் செந்தில்குமார் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.