புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் குவிந்த மக்கள் | Palm sunday rally | Easter | Velankanni | Tuticor
இயேசு கிறிஸ்து 40 நாள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் தவக்காலம் கடைபிடிக்கின்றனர். இந்த ஆண்டு 40 நாள் தவக்காலம் மார்ச் 5ம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது. தவக்காலத்தின் ஒரு பகுதியாக இன்று குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்படுகிறது. உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் அதிபர் இருதயராஜ், பங்கு தந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் பங்கு தந்தைகள், கன்னியாஸ்திரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பின் அனைவரும் குருத்தோலைகளை கைகளில் ஏந்தி ஓசன்னா கீர்த்தனைகளை பாடியபடி பவனியாக சென்றனர். இதேபோல் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் பங்குத்தந்தை ஸ்டார்வின் தலைமையில் நடந்த குருத்தோலை பவனியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அங்குள்ள திரு இருதய ஆலயத்தில் ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடந்த பவனியில் ஏராளமானோர் குருதோலைகளை ஏந்தி ஓசன்னா பாடலை பாடியபடி பவனியாக சென்றனர். திருச்சி மாநகரில் பிரசித்திபெற்ற எடமலைப்பட்டிபுதூர் குழந்தை இயேசு திருத்தலத்தில், அதிபர்தந்தை அந்தோணி இருதயராஜ் அதிகாலை சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என 700க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பங்கு மக்கள் குருத்தோலைகளை கைகளில் ஏந்தி ஓசானா என்று பாடல் பாடியவாறு தெருக்களில் பவனியாக சென்றனர். கோவையில் இன்று அனைத்து கிறிஸ்தவ பேராலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. கத்தோலிக்க, சி.எஸ்.ஐ, லுத்தரன் உட்பட பல பிரிவு பேராலயங்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள் உற்சாகமாக குருத்தோலைகளை கைகளில் ஏந்தியபடி, ஓசன்னா பாடி பவனி சென்றனர். பேரணி மீண்டும் ஆலயத்தை அடைந்ததும் நடந்த ஆராதனையில் பங்கேற்று வழிபட்டனர். புதுச்சேரியில் உள்ள இருதய ஆண்டவர் பசிலிகா தேவாலாயம், ஜென்மராக்கினி மாதா ஆலயம், விண்ணேற்பு அன்னை ஆலயம், வில்லியனூர் லூர்து மாதா ஆலயம் உட்பட அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக வந்தனர். அப்போது ஓசன்னா வாழ்த்து பாடல்களை பாடி இறைவனை வழிபட்டனர். தொடர்ந்து நடந்த சிறப்பு பிரார்த்தனையில் அனைவரும் பங்கேற்றனர். இதேபோன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நடந்த குருத்தோலை ஞாயிறு பவனி மற்றும் சிறப்பு திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபட்டனர்.