பங்குனி உத்திர திருவிழா: முருகன் கோயில்களில் கோலாகலம்|PanguniUttiram|Murugan Temple festivel
பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுதும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமின்றி, சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள முக்கிய கோயில்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பல்வேறு சிவாலயங்களிலும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடந்தது. திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடந்த பங்குனி உத்திர பாத தரிசன திருவிழாவில், தியாகராஜ சுவாமி இடது பாதம் துாக்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனை, மகா அபிஷேகம் நடந்தது. நடராஜ சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. கும்பகோணம் அடுத்த சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மூலவர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் . பக்தர்கள் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டனர். தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி சவுந்தரநாயகி சமேத அக்னீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.