காலில் கையெழுத்திட்டு மோடிக்கு பரிசளித்த வீராங்கனை Modi meets with Paralympic medallists| Paralymp
பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி, 7 தங்கம் 9 வெள்ளி 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்கள் வென்றனர். இதுவரை இல்லாத வகையில் 2024 பாராலிம்பிக்கில் இந்திய வீரர்கள் அதிக பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தனர். பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக வீரர்கள் டில்லியில் இருந்து பாரிஸ் கிளம்பும் முன் பிரதமர் மோடி அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்தி வழியனுப்பி வைத்தார். அதே போல், போட்டிகள் முடிந்து பதக்கங்களுடன் நாடு திரும்பிய வீரர்களை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடி உற்சாகப்படுத்தினார். டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியை சந்தித்த பாராலிம்பிக் வீரர்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். வீரர்களிடம் ஆட்டோகிராப் பெற்றும், அவர்கள் அளித்த தொப்பி உள்ளிட்ட அன்பு பரிசுகளை பெற்றும் மோடி அவர்களை உற்சாகப்படுத்தினார். இரு கைகளையும் இழந்த நிலையில் கால்களால் அம்பு எய்தி, வில்வித்தை போட்டியில் வெண்கலம் வென்ற சீதல் தேவியிடம் மோடி ஆட்டோகிராப் பெற்றார். சீதல் ஒரு டீசர்ட்டில் தன் காலால் கையெழுத்திட்டு அதை மோடிக்கு பரிசாக வழங்கினார். குண்டெறிதல் போட்டியில் தங்கம் வென்ற நவ்தீப் சிங் தான் மிகவும் குள்ளமாக இருப்பதாக வருத்தம் தெரிவித்தார். அவரது வருத்தத்தை போக்கும் வகையில், பிரதமர் மோடி தரையில் அமர்ந்து அவரை தொப்பி அணிவிக்க செய்தார். இப்போது பாருங்கள் நீங்கள் என்னை விட உயரமாக தெரிகிறீர்கள் என மோடி உற்சாகப்படுத்தினார்.