அதானியில் தொடங்கி அம்பேத்கர் அமளியுடன் முடிந்தது பார்லிமென்ட்
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், நவம்பர் 25ல் தொடங்கியது. முதல் நாளிலேயே அதானி மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்ட விவகாரத்தை கிளப்பி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் பற்றி விவாதிக்க வலியுறுத்தி தினமும் எதிர்கட்சியினர் அமளி செய்ததால் பார்லிமென்ட் தொடர்ந்து முடங்கியது. திடீர் திருப்பமாக எதிர்கட்சிகளுக்கும், அரசுக்கும் தற்காலிக உடன்பாடு ஏற்பட்டது. அரசியலமைப்பின் 75வது ஆண்டு விழாவையொட்டி சிறப்பு விவாதம் நடத்த எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அரசும் ஏற்றுக்கொண்டது. லோக்சபாவில் விவாதம் பிரதமர் பதிலுரையுடன் அமைதியாக முடிந்தது. ராஜ்யசபாவில் இறுதியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பதிலுரை சர்ச்சையை ஏற்படுத்தியது. அம்பேத்கர் பற்றி அவர் பேசிய கருத்துக்களை எதிர்கட்சிகள் சர்ச்சையாக்கின. அதானி விவகாரம் பின்னுக்கு தள்ளப்பட்டு, அம்பேத்கர் விவகாரத்தை எதிர்கட்சிகள் கையில் எடுத்தன. கடைசி மூன்று நாட்கள் பார்லிமென்ட் வளாகத்தில் அம்பேத்கர் படத்துடன் எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பாஜ மற்றும் காங்கிரஸ் எம்பிக்களுக்குள் ஏற்பட்ட கைகலப்பில் 2 பாஜ எம்பிக்களின் மண்டை உடைந்தது.