பொது இடத்தில் தலைவர்கள் சிலை வைப்பதை ஏற்க முடியாது | Party leaders statue | Public places | High co
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் முத்துக்கிருஷ்ணன், மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். திருவாரூர் குடவாசல் சாலை நாச்சியார் கோவில் குளக்கரை பகுதியில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். சிலை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலை பொதுமக்களுக்கோ, போக்குவரத்துக்கோ பாதிப்பு இல்லாத வகையில் தான் உள்ளது. இருப்பினும் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பொறியியல் பிரிவு அதிகாரிகள் எம்.ஜி.ஆர். சிலை அதன் அருகில் உள்ள கட்சிக்கொடியை அகற்றுமாறு நோட்டீஸ் அனுப்பினர். சிலையை அகற்றக்கூடாது என அதிமுக தரப்பிலும் மனுக்கள் கொடுக்கப்பட்டன. 3 முறை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் சிலையை தன்னிச்சையாக அகற்றக்கூடாது, அப்படி நடந்தால் மக்கள் வருத்தப்படுவார்கள். எனவே சிலை மற்றும் அதனருகில் உள்ள அ.தி.மு.க. கொடியை அகற்ற வழங்கிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களது தலைவர்களின் சிலைகள், கட்சி கொடிகளை சொந்த அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே? பொது இடங்களில் வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி. இயக்கமாக இருந்தாலும் சரி. கட்டாயமாக அனுமதிக்க முடியாது. எனவே இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய நேரிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மனுதாரர் தரப்பில் மனுவை திரும்ப பெறுவதாக தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை திரும்ப பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.