ரத்தன் டாடா பற்றிய கடிதத்தில் மோடி உருக்கம் PM Modi letter to Rathan Tata
டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்து பிரதமர் மோடி கடிதமாக எழுதி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். ரத்தன் டாடா நம்மை விட்டு பிரிந்து ஒரு மாதம் ஆகிறது. அவர் நம்மிடையே இல்லாததை அனைத்து தரப்பு மக்களும் ஆழமாக உணருகின்றனர். இது உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. இளைஞர்களுக்கு ரத்தன் டாடா ஓர் உத்வேகமாக இருந்தார். கனவுகள் தொடர தகுந்தவை என்பதை நினைவூட்டிய ஆளுமை. வெற்றி என்பது இரக்கம் மற்றும் பணிவுடன் இணைந்திருக்கும் என்பதை ஞாபகப்படுத்தியவர். அவரது தலைமையிலான டாடா குழுமம் உலக அளவில் பிரபலம், நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை பெற்று புதிய உச்சத்தை தொட்டது. மற்றவர்களின் கனவுகளுக்கு ஆதரவு அளித்தது அவரது குறிப்பிடத்தக்க பண்புகளில் ஒன்றாகும். அண்மை காலங்களில் இந்தியாவின் ஸ்டார்ட் அப் சூழல் அமைப்புக்கு வழிகாட்டியாகவும் பல நம்பிக்கைக்குரிய முயற்சிகளில் முதலீடு செய்தவர். இளம் தொழில்முனைவோர்களின் நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் புரிந்துகொண்டு இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க அவர்களின் முயற்சிகளை ஆதரித்தார். தனிப்பட்ட முறையில் பல ஆண்டுகளாக அவரை மிக நெருக்கமாக அறிந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. குஜராத்தில் நாங்கள் நெருக்கமாக பணியாற்றினோம். அங்கு அவர் மிகவும் ஆர்வம் காட்டி பல திட்டங்களுக்கு முதலீடுகளை செய்தார். ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ்சுடன் நான் வதோதராவில் சி-295 விமானங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை கூட்டாக தொடங்கி வைத்தோம். ரத்தன் டாடா தான் இதற்கான பணிகளை தொடங்கினார். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு அவரது வருகை இல்லாதது பெரும் குறை என்பதை சொல்ல தேவையில்லை. நான் மத்திய அரசு பொறுப்புக்கு சென்ற பிறகும் எங்கள் நட்பு தொடர்ந்தது. நமது தேசத்தை கட்டியெழுப்புவதில் ஒரு உறுதியான பங்குதாரராக இருந்தார். குறிப்பாக துாய்மை இந்தியா இயக்கத்திற்கு ரத்தன் டாடா அளித்த ஆதரவு என் இதயத்திற்கு நெருக்கமானது. அவரது இதயத்திற்கு நெருக்கமான மற்றொரு செயல் மருத்துவம். தமது இறுதி ஆண்டுகளை மருத்துவத்திற்கு அர்ப்பணிக்க விரும்புவதாக திட்டவட்டமாக கூறியிருந்தார். உடல்நலம் மற்றும் புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவுடையதாக மாற்றுவதற்கான முயற்சிகள் அவரிடம் வேரூன்றியிருந்தன.