டில்லி குண்டு வெடிப்பில் பலியானோருக்கு பூடானில் அஞ்சலி: மன்னர் தலைமையில் பிரார்த்தனை |Modi|Bhutan
அரசு முறைப் பயணமாக பூடான் நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, திம்புவில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். தனது உரையின் துவக்கத்தில், டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பேசினார். நான் மிகுந்த மன வேதனையுடனும், கனத்த இதயத்துடனும் இங்கு வந்துள்ளேன். டில்லியில் நேற்று மாலை நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் மன வேதனையை உணர்கிறேன். அவர்களுடன் இந்த தேசமே உடன் நிற்கிறது. இந்த சம்பவம் குறித்து, நேற்றிரவு புலனாய்வு அமைப்பை சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்தேன். இதன் பின்னணியின் ஆணி வேர் வரை ஆராயப்படும். இந்த சம்பவத்தை சாதாரணமாக விட்டு விட முடியாது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவர் என மோடி கூறினார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியால் வாங்சுக், டில்லி சம்பவத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தினார். அவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், இந்திய மக்கள், பிரதமர் மோடி ஆகியோருக்காக பிரார்த்திப்பதாக கூறினார். மன்னரின் அறிவிப்பை ஏற்று அந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தி, ஒரே குரலில் பிரார்த்தித்தனர்.