2 ஆண்டில் 3.5 கோடி வேலை: ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு PM Viksit Bharat Rojgar Yojana | Financial as
இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்கவும், முதல்முறை பணியில் சேருவோரை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு 15,000 ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தை சுதந்திர தின நாளில் பிரதமர் மோடி அறிவித்தார். வேலையில் சேருவோர் மட்டுமின்றி, வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் நிறுவனங்களுக்கும் மத்திய அரசின் சார்பில் இன்சென்டிவ் வழங்கப்படும் எனவும் பிரதமர் கூறினார். ஏற்கனவே இத்திட்டம் குறித்து மத்திய அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு, ஒப்புதலும் வழங்கப்பட்டிருந்த நிலையில், விரைவில் இத்திட்டம் அமலாகும் என, பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் உறுதி கூறியிருந்தார். மோடி சொன்னதுபோலவே, பிரதான் மந்திரி விகசித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பணப்பலன் அடைய ஆன்லைன் பதிவுக்கான போர்ட்டல் இன்று முதல் இயங்க துவங்கியுள்ளதாக, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார். 2025 ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 2027 ஜூலை 31 வரை முதல் முறையாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு அதிகபட்சமாக 15,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். இந்த தொகை 2 தவணைகளில் வழங்கப்படும். அதேபோல், வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் நிறுவனங்களுக்கு ஒரு ஊழியரை பணியமர்த்தினால் மாதம் 3000 வரை ஆறு மாதங்களுக்கு நிதி உதவியை அரசு வழங்கும். இந்த திட்டத்தின் மூலம் அடுத்த 2 ஆண்டுகளில், 3.5 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உற்பத்தி துறையில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பிரகாசமாக்கவும், வேலை வாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்கவும், 1 லட்சம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அமைச்சர் மாண்டவியா தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் பலன் அடைய, முதல் முறையில் பணியில் சேருபவர்களும் வேலை வாய்ப்பை வழங்கும் நிறுவனங்களும் பிஎம் விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டத்திற்கான போர்ட்டலில் நேரடியாக பதிவு செய்யலாம் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.