ராஜ்யசபா சீட்டும் கேட்டதால் யோசனையில் பாஜ! Anbumani | PMK | BJP | ADMK | 2026 Election
தமிழகத்தில் அடுத்தாண்டு நடக்கும் சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க, பா.ஜ. கூட்டணி அமைத்துள்ளது. அக்கூட்டணியை ஏற்படுத்திய அமித் ஷா, கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என அறிவித்தார். ஆனால் இதுவரை எந்த கட்சியும் இணையவில்லை. இதனால், ஏற்கனவே லோக்சபா தேர்தலின் போது பா.ஜ. கூட்டணியில் இருந்த பா.ம.க.வை, அ.தி.மு.க. பா.ஜ. கூட்டணிக்கு கொண்டு வரும் முயற்சியில் பா.ஜ. தேசிய தலைமை இறங்கி உள்ளது. இதற்காக, அக்கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டாவை களம் இறக்கி விட்டுள்ளது. இதையடுத்து, இரண்டாக பிளவுபட்டிருக்கும் பா.ம.க.வின் ராமதாசையும், அன்புமணியையும் பாண்டா சந்தித்துள்ளார். இருவரிடமும் கூட்டணி குறித்து பேசிய பாண்டா, முதலில் இரண்டாக பிளவுபட்டிருக்கும் பா.ம.க. ஒன்றுபட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார். ஆனால், அதற்கு ராமதாஸ் ஒப்புக் கொள்ளவில்லை. இருந்தாலும், விடாமல் அன்புமணியை அவருடைய வீட்டுக்கே சென்று சந்தித்தார். அப்போது, பா.ம.க. ஒன்றுபட வேண்டும் என வலியுறுத்தியதை அன்புமணி ஏற்று கொண்டார். இதையடுத்து கூட்டணியில் இணைய 25 சட்டசபை தொகுதிகளையும், ஒரு ராஜ்ய சபா எம்.பி. சீட்டையும் ஒதுக்க வேண்டும் என நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பா.ம.க. வட்டாரங்கள் கூறியதாவது: 25 சீட்டுக்கு பழனிசாமியிடம் பேசி ஒப்புதல் பெற்று விடலாம். ஆனால், ராஜ்ய சபா சீட்டை பொறுத்தவரை, பா.ஜ. தரப்பில் எந்தவித உறுதியும் அளிக்க முடியாது. ஏனென்றால், பா.ஜ.வுக்கு தமிழகத்தில் போதுமான எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் இல்லை. ராஜ்யசபா சீட் தொடர்பாக பழனிசாமியிடம் தான் பேச வேண்டும். அவர் ஒப்புக் கொண்டால், பா.ஜ.வுக்கு ஆட்சேபனை இல்லை என பாண்டா கூறியிருக்கிறார்.