போலீஸ் இன்ஸ்பெக்டர் எழுதிய கடிதத்தால் ராமநாதபுரத்தில் பரபரப்பு | Police inspector | Resigning letter
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உட்கோட்டம், ஆர்.எஸ். மங்கலம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சரவணன். 2008ல் நேரடி சார்பு இன்ஸ்பெக்டராக தேர்வான இவர், 2020ல் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற நிலையில் 16 ஆண்டுகளாக பணியில் உள்ளார். தமது அதிகாரத்தில் முகாம் அலுவலக எழுத்தர் தலையிடுவதாக கூறி உள்துறை செயலருக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். திருவாடானை டிஎஸ்பி அலுவலக எழுத்தர், என்னிடம் கேட்காமல் ஆர்.எஸ். மங்கலம் போலீஸ் ஸ்டேஷன் காவலர்களுக்கு தன்னிச்சையாக தொடர்ந்து அலுவல்களை நியமித்து தமது அதிகாரத்தில் தலையிட்டு வருகிறார். இதுதொடர்பாக ஏற்கனவே அறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறேன். தற்போது காவல்நிலைய சரகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எனது வாகன டிரைவரை வேறு பணிக்கு வருமாறு ஆயுதப்படையில் இருந்து நேரடியாக தகவல் வந்துள்ளது. இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடப்பதால் எனது காவல் பணியை திறம்பட செயல்பட முடியவில்லை. இப்போது உத்திரகோச மங்கை ஆருத்ரா தரிசனத்துக்கு ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து சார்பு இன்ஸ்பெக்டர், 14 காவலர்களை என்னிடம் எவ்வித அறிவிப்பும் இன்றி தன்னிச்சையாக பணி நியமித்துள்ளனர். தனது போலீஸ் ஸ்டேஷனில் ஒப்பளிக்கப்பட்ட அதிகாரிகள், காவலர்களில் 10 பேர் என் அனுமதி இல்லாமல் அயல்பணியாக செல்கின்றனர். பொறுப்பு அதிகாரியான என்னை கேட்காமல் நிர்வாகத்தில் தலையிட்டு சீர்குலைவை ஏற்படுத்துவதால் இன்ஸ்பெக்டராக பணியாற்ற விருப்பம் இல்லை.