பெண் போலீசுக்கு சோகம்: போலீஸ் வட்டாரம் அதிர்ச்சி police woman lakshmi chain snatching Tirupathur
வேலூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து 4 மாத கர்ப்பிணியை காமுகன் தள்ளி விட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்தது. தமிழகம் முழுதும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து வருவது மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ஸ்கூட்டரில் சென்ற பெண் போலீசிடம் தங்கத்தாலியை அறுத்து, அவரை கீழே தள்ளி விட்டு மர்ம ஆசாமிகள் தப்பிச் சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னவேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி லட்சுமி (42). திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்றப்பிரிவு பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். மாலையில் பணியை முடித்து விட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு புறப்பட்டார். ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியில் சென்றபோது, அவரை இருசக்கர வாகனத்தில் 2 ஆசாமிகள் பின் தொடர்ந்தனர். திடீரென அவர்கள் லட்சுமியின் கழுத்தில் இருந்த 11 சவரன் தங்க தாலி சரடை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர். பின்னால் உட்கார்ந்திருந்த ஆசாமி, தாலிச்செயினை பிடித்து இழுத்ததால், நிலைதடுமாறி வண்டியில் இருந்து கீழே விழுந்து லட்சுமி காயம் அடைந்தார். செயின் அறுத்ததில் கழுத்திலும் காயம்பட்டது.