விசைத்தறி உரிமையாளர்கள் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது
கூலி உயர்வு கோரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் சுமார் ஒன்றே கால் லட்சம் விசைத்தறியாளர்கள் 33 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் மூலம் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் உற்பத்தி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இச்சூழலில், இன்று, இரு மாவட்ட கலெக்டர்கள், தொழிலாளர், நலத்துறை கூடுதல் ஆணையர் மற்றும் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சாமிநாதன், கயல்விழி ஆகியோர் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சோமனூர் ரகங்களுக்கு 15 சதவீதம், பல்லடம், அவினாசி, மங்களம் உள்ளிட்ட இதர ரகங்களுக்கு 10 சதவீதம், என்று கூலி உயர்வு வழங்கப்பட்டது. 2022 ஒப்பந்தத்தில் இருந்து இந்த உயர்வு வழங்க ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டனர். இதை ஏற்று விசைத்தறிஉரிமையாளர்கள் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றனர்.