பிரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா அபாரம்! Praggnanandhaa Vs Magnus Carlsen
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் பிரீஸ்டைல் (FreeStyle) கிராண்ட் ஸ்லாம் செஸ் போட்டி நடக்கிறது. குரூப் ஒயிட் பிரிவில் நார்வை நாட்டைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மாக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் லெவோன் அரோனியன், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், இந்தியாவின் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா உள்பட 8 பேர் லீக் ஆட்டங்களில் விளையாடி வருகின்றனர். மாக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மிக சிறப்பாக விளையாடி வெறும் 39 காய் நகர்த்தல்களில் வெற்றி பெற்றார். 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனை 2024ம் ஆண்டு மே மாதம் நார்வே நாட்டில் நடந்த போட்டியில் பிரக்ஞானந்தா முதல் முறையாக வென்றிருந்தார். இப்போது மீண்டும் ஒரு முறை உலக செஸ் சாம்பியனை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் பிரக்ஞானந்தா குரூப் ஒயிட் பிரிவில் 4.5 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். இந்த வெற்றி அவருக்கு காலிறுதியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது.