ஆபரேஷன் சிந்துாரில் முதல் நாளே இந்தியாவுக்கு தோல்வி தான்: பிருத்விராஜ் சவான் பேச்சு Prithviraj Singh
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய படைகள் தாக்கி அழித்தன. இதற்கு ஆபரேஷன் சிந்துார் என மத்திய அரசு பெயரிட்டது.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, பாக்., ராணுவம் களத்தில் இறங்கியதால், அந்நாட்டு விமானப் படை தளங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. அந்நாட்டின் 9 முக்கிய விமாப்படை ஓடுதளங்கள் தாக்கி அழிக்கப்பட்டன.
பாகிஸ்தான் ஏவிய ட்ராேன்கள் அனைத்தையும் நம் நாட்டின் வான்வெளி கவசம் தாக்கி அழித்ததாக, முப்படை தளபதிகள் விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது, முதல் நாளே இந்தியா தோற்கடிக்கப்பட்டதாக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிருத்விராஜ் சவான் கருத்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புணே நகரில் பிருத்விராஜ் பேசியதாவது:
ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது, இரு தரப்பு சண்டையின் முதல் நாளே இந்திய விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதையடுத்து, இந்திய விமானப்படை விமானங்கள் ஏதும் வானில் பறக்கவில்லை.
ஒரு வேளை, பதிண்டா, சிர்சா, குவாலியரில் இருந்து நம் விமானப்படை விமானங்கள் பறந்திருந்தால், அவை பாகிஸ்தான் படைகளால் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும். அதன் காரணமாகவே அவை அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்தியா - பாக். இடையே சமீபத்தில் நடந்த சண்டையின் போது, இரு தரப்பிலுமே வான்வழித் தாக்குதல்களே நடந்தன. நம் ராணுவ வீரர்கள் 1 கிமீ துாரம் கூட நகரவில்லை. அப்படியிருக்கையில், ராணுவத்தில் 12 லட்சம் வீரர்களை வைத்திருப்பதன் அவசியம் என்ன?
அவர்களை வேறு ஏதேனும் பணியில் ஈடுபடுத்தலாமா என யாேசிக்கலாம் என, பிருத்விராஜ் பேசினார்.
ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையை விமர்சித்ததுடன், இந்திய விமானப்படை விமானம் தாக்குதலுக்குள்ளானது, 12 லட்சம் ராணுவ வீரர்கள் எதற்கு என்றெல்லாம் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிருத்விராஜின் பேச்சுக்கு பாஜ தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்கப் போவதில்லை என பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.
#Prithvirajsinghchavan| #Operationsindhoor| Congress| BJP| IndianArmy|