கூட்டத்தில் தாயை இழந்த சிறுவனின் பரிதாப நிலை
ஹைதராபாத் சந்தியா தியேட்டரில் கடந்த 4ம் தேதி புஷ்பா-2 படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அப்போது, படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் சென்றார். அவரை பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் முண்டியடித்தனர். படம் பார்க்க வந்த பெண் ரேவதி, கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தார். அவரது 9 வயது மகன் ஸ்ரீ தேஜ் பலத்த காயமடைந்தான். ஹைதராபாத் கிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்ரீ தேஜுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் ஆனந்த், சுகாதார செயலாளர் கிறிஸ்டினா ஆகியோர் சிறுவனை மருத்துவமனையில் சென்று பார்த்தனர். சிறுவனுக்கு ஏற்பட்ட பாதிப்பு, சிகிச்சைகள் பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். பின் பேசிய கமிஷனர் ஆனந்த், கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவன் ஸ்ரீ தேஜுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார். சிறுவன் குணமடைய நீண்ட நாட்கள் ஆகும் என டாக்டர்கள் சொல்கிறார்கள். இப்போது வெண்டிலேட்டர் உதவியுடன் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றார்.