குவாரி ஓனரின் தம்பி மற்றும் சூப்பர்வைசரை தூக்கியது போலீஸ் | Quarry accident | Sivaganga Police
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மல்லாக்கோட்டையில் மேகா புளூ மெட்டல் என்ற கல் குவாரி இயங்கி வந்தது. சென்ற 20 ம் தேதி காலை இங்கு வெடி வைப்பதற்காக துளையிட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக பாறை சரிந்து பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் பலியாகினர். படு காயத்துடன் மீட்கப்பட்ட மற்றொருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். தமிழகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்தில் விதிமீறல்களுடன், பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது. 13 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட இக்குவாரியில் ஆரம்பத்தில் கிராவல் மண்ணும், ஜல்லி கற்களும் வெட்டி எடுத்து விற்கப்பட்டது. கொரோனாவுக்கு பின் எம் சாண்டு, பி சாண்டு மணலுக்கு அதிக தேவை ஏற்பட்டதால் அதுவும் தயாரிக்கப்பட்டது. இதற்காக குவாரி உள்ளே பல ஏக்கர் பரப்பில் 400 அடி ஆழத்திற்கும் மேலாக பாறை வெட்டி எடுக்கப்பட்டுள்ளது அப்பாவி தொழிலாளர்கள் பலியானதற்கு குவாரி நிர்வாகம் மட்டுமின்றி, விதிமீறல்களை கண்டுகொள்ளாத அதிகாரிகளும் காரணம் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். . குவாரிக்கான உரிமத்தை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. குவாரி ஓனர் மேகவர்மன் உள்ளிட்ட 5 பேர் மீது மல்லாக்கோட்டை விஏஓ பாலமுருகன் புகார் கொடுத்தார். தலைமறைவாகிய 5 பேர் மீதும் எஸ்.எஸ்.கோட்டை போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர். இந்த சூழலில் தனிப்படை போலீசார் இன்று மேகவர்மனின் தம்பி கமலதாசன் மற்றும் குவாரி சூப்பர்வைசர் கலையரசனை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேகவர்மன் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.