ரவீந்திரநாத் தாகூர் வீட்டை தாக்கிய முஸ்லிம் அமைப்புகள் Rabindranath tagore|ancestral home|Attacke
தேசிய கவி ரவீந்திரநாத் தாகூரின் முன்னோர்கள் வாழ்ந்த இல்லம் வங்க தேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ளது. அது, அருங்காட்சியமாக மாற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. ரவீந்தரநாத் தாகூர் இந்த இல்லத்தில் இருந்து தனது இலக்கிய படைப்புகளை உருவாக்கியுள்ளார். கடந்த 8ம் தேதி ஒருவர் இந்த அருங்காட்சியகத்தை பார்க்க சென்றார். அவரது வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக அருங்காட்சியகத்தில் வேலை செய்யும் ஊழியருடன் தகராறு ஏற்பட்டது. அந்த நபரை அருங்காட்சியகம் உள்ளே அழைத்துச் சென்று அறையில் வைத்து ஊழியர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பரவியதை அடுத்து உள்ளூர் மக்கள் கொந்தளித்து எழுந்தனர். அருங்காட்சியக இயக்குநருக்கு எதிராக கடந்த 10ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களில் சிலர் அருங்காட்சியகத்துக்குள் புகுந்து சூறையாடினர். இயக்குநரையும் தாக்கினர். ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையர் வாழ்ந்த இல்லம் தாக்கப்பட்டதற்கு பாஜ எம்.பி. சம்பிட் பத்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது வங்க தேசத்தில் செயல்படும் ஜமாத்-இ-இஸ்லாமி, ஹெஃபாசத்-இ-இஸ்லாம் அமைப்புகள் ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையர் வீட்டை தாக்கி இருக்கின்றன. அது ஒரு அருங்காட்சியகமாக பராமரிக்கப்பட்டு வந்ததால் அதில் இந்திய கலாசாரமும், வரலாறும் இருக்கிறது. ரவீந்திரநாத் தாகூர் வீட்டைத் தாக்குகிறார்கள் என்றால், அவரது சிந்தனைகளைத் தாக்குகிறார்கள் என்றுதான் அர்த்தம். இதை உலகம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். ஒழுக்கம், கலாசார பெருமையுள்ள நாடுகள் முன்வந்து இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இந்த சம்பவத்துக்கு வங்க தேசத்தை ஆட்சி செய்யும் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு எந்த பதிலும் சொல்லவில்லை. பாரதிய ஜனதா இதை வன்மையாக கண்டிக்கிறது என சம்பிட் பத்ரா கூறினார். ரவீந்திரநாத் தாகூர் வீடு மீதான தாக்குதலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க முதல்வர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் இந்த விஷயம் குறித்து மத்திய அரசு, வங்க தேச அரசுடன் பேச வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக வங்க தேச அரசின் தொல்லியல் துறை 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. தாகூர் மூதாதையர் இல்லம் தாக்கப்பட்டது குறித்து 5 தினங்களுக்குள் அறிக்கை தரும்படி கேட்டுள்ளது.