வாக்காளர் பட்டியல் மோசடி: எதிர்கட்சி எம்பிக்கள் போராட்டம் Rahul Gandhi|priyanka |voter list issue
கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தல் மற்றும் அதன்பிறகு நடந்த சில மாநில சட்டசபை தேர்தல்களில் முறைகேடு நடந்திருப்பதாக லோக்சபா எதிர்கட்சித் தலைவர் ராகுல் குற்றம்சாட்டி வருகிறார். இந்த விவகாரத்தில் காங்கிரசுக்கு ஆதரவாக, திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்கட்சிகளும் பார்லிமென்ட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் போராடி வருகின்றன. போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள் என பலவிதமாக தில்லுமுல்லுகள் நடந்ததாக கூறி, ராகுல் சில ஆவணங்களை வெளியிட்டார். அவரது இந்தக் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததைக் கண்டித்து டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி ராகுல் தலைமையில் பேரணி நடத்த இண்டி கூட்டணி கட்சி எம்பிக்கள் முடிவு செய்தனர். ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கூறி, போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். போலீசாரின் தடையை மீறி பார்லிமென்ட் வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியாக புறப்பட்டனர். காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, ராஷ்ட்டிரிய ஜனதா தளம், உள்பட 25 கட்சிகளைச் சேர்ந்த 300 எம்பிக்கள் பேரணியில் கலந்து கொண்டனர். ஆனால், அவர்களை மத்திய போக்குவரத்து அமைச்சகம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.