ராகுல் திட்டத்தை புஸ் ஆக்க பாஜ ரெடி
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 20 வரை நடைபெற உள்ளது. வழக்கம்போல் கூட்டத்தொடரை முடக்க பல விஷயங்களை எதிர்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல், பாஜ கூட்டணி அரசுக்கு எதிராக 5 ஊழல் புகார் புகார்களை கையில் எடுத்து இருப்பதாகவும், பார்லிமென்டில் அதை வெளியிட்டு பாஜ அரசை ஒரு கை பார்ப்பார் என்றும் காங்கிரசார் கூறுகின்றனர். வெளிநாட்டில் இருந்து ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் ஊழல், உணவு கார்ப்பரேஷனில் ஊழல் என பேச ராகுல் தயார் ஆகி விட்டார். இவற்றை தயார் செய்து தந்தவர் அவருக்கு நெருக்கமான ராஜ்யசபா எம்பி ஜெய்ராம் ரமேஷ். ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள பாஜவும் தயாராகிவிட்டது. இளம் எம்பிக்கள் அனுராக் தாக்குர், நிஷிகாந்த் துபே ஆகியோருக்கு இது தொடர்பாக கட்சி மேலிடம் ஆலோசனைகள் வழங்கி உள்ளது. இது பற்றி பாஜ தலைவர்கள் கூறும்போது, ரபேல் போர் விமானம் வாங்கியதில் ராகுல் ஊழல் புகார் சொன்னார். அந்த கோப்புகளை சுப்ரீம் கோர்ட் ஆய்வு செய்து ஊழல் இல்லை என் சொல்லிவிட்டது. ஜார்கண்ட், மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்திலேயே இந்த ஊழல் புகார்களை ராகுல் சொல்லியிருந்தால், காங்கிரசுக்கு சாதகமாக இருந்திருக்குமே. பிறகு ஏன் செய்யவில்லை. காரணம், பாஜ வழக்கு தொடரும் என்பதால்தான். ஆனால், பார்லிமென்டில் பேசினால் வழக்கு போட முடியாதே என பாஜவினர் கூறினர்.