மகள் வழி பேரனுக்கு கட்சி பதவி வழங்கிய ராமதாஸ்! Ramadoss | Anbumani | PMK | Srigandhi | Sugandhan
பா.ம.க.வில் நடந்த உச்சகட்ட மோதலுக்கு பின், அன்புமணியை கட்சியை விட்டு நீக்கிய நிறுவனர் ராமதாஸ், அவர் வகித்து வந்த செயல் தலைவர் பதவியை அன்புமணியின் சகோதரி ஸ்ரீகாந்திக்கு கொடுத்தார். மேலும் ஸ்ரீகாந்தியின் மூன்றாவது மகன் முகுந்தனுக்கு, அன்புமணி ஏற்கனவே வகித்து வந்த மாநில இளைஞர் சங்க பதவியை, கட்சி செயற்குழு கூட்டத்தின் வாயிலாக அளித்தார். இதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நியமனம் கட்சிக்குள், ராமதாசுக்கும் - அன்புமணிக்கும் மோதல் உருவாவதற்கு பிள்ளையார் சுழி போட்டது. கட்சிக்குள் பிரச்னை நாளுக்கு நாள் வலுத்து வந்ததால், முகுந்தன் அந்த பதவியை ராஜினாமா செய்தார். இதன்பின் அந்த பதவியை ஜி.கே.மணியன் மகன் தமிழக்குமரனுக்கு, ராமதாஸ் வழங்கினார். இந்நிலையில், தன்னுடைய மகள் ஸ்ரீ காந்தியின் மூத்த மகனான டாக்டர் சுகந்தனை கட்சியில் முக்கியத்துவப்படுத்தும் நோக்கோடு, பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதன்வாயிலாக சுகந்தனை, தன்னுடைய அரசியல் வாரிசாக ராமதாஸ் அறிமுகப்படுத்தி உள்ளதாக, அக்கட்சியினர் கூறுகின்றனர். இதற்கிடையில், வரும் டிசம்பர் 12ம் தேதி தமிழகம் முழுதும் மாவட்ட தலைநகரில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ம.க சார்பில் போராட்டம் நடத்தப்படும் என ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக டாக்டர் சுகந்தனை ராமதாஸ் நியமித்துள்ளார்.