ஒட்டுக்கேட்பது யார்? தமிழக அரசியல் புள்ளிகள் பீதி | ramadoss bugging device issue | bjp vs dmk | pmk
பாமக நிறுவனர் ராமதாசை தொடர்ந்து, தங்கள் வீடுகளிலும் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்தில், பல அரசியல் கட்சி தலைவர்கள் சோதனை நடத்திய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 11ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், தைலாபுரம் வீட்டில் தனது இருக்கைக்கு அருகே ஒட்டுக்கேட்பு கருவி இருந்ததாகவும் லண்டனில் இருந்து வாங்கி வந்து மர்ம நபர்கள் வைத்ததாகவும் அதிர்ச்சி கிளப்பினார். அன்புமணி-ராமதாஸ் மோதலுக்கு இடையே வெளியான இந்த தகவல் அரசியல் களத்தை அதிரவைத்தது. தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் விசாரணை நடத்திய ராமதாஸ், சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளித்தார். ஒட்டுக் கேட்பு கருவியின் பின்னணியில் மத்திய, மாநில உளவுத் துறை இருக்குமோ என்ற சந்தேகம் ராமதாசுக்கு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். தன்னை சந்திக்கும் அரசியல் கட்சி பிரமுகர்களிடம், தொலைபேசி பேச்சுகளை உளவுத்துறை ஒட்டு கேட்கும் என்பதால், எப்போதும் நேரில் பேசுவதை மட்டுமே வழக்கமாக வைத்துள்ளேன். இதை தெரிந்து கொண்டு, முக்கியப் பிரமுகர்களை நான் சந்திக்கும் அறையில், ஒட்டுக்கேட்பு கருவி வைத்துள்ளனர் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தான் ராமதாஸ் வீட்டில் போலவே, தங்கள் வீடுகளிலும் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. ராமதாசை போல தனியார் துப்பறியும் நிறுவனத்தின் நிபுணர்களை வரவழைத்து தங்கள் வீடு, அலுவலகம், வாகனங்களில் சிலர் சோதனை நடத்தி உள்ளனர். குறிப்பாக, 10 ஆண்டுகளாக தமிழக பாஜவில் நிர்வாக பொறுப்பில் இருக்கும் சக்தி வாய்ந்த செயலாளர் ஒருவர், தான் தங்கியிருக்கும் அறை, அலுவலக அறை, வாகனம் ஆகியவற்றில் தனியார் துப்பறியும் நிபுணர்களைக் கொண்டு ரகசியமாக சோதனை நடத்தி இருக்கிறார். தான் பயன்படுத்தும் 2 மொபைல் போன்களிலும் ஒட்டுக்கேட்பு மென்பொருள் அல்லது செயலிகள் உள்ளதா என்றும் அவர் சோதனை நடத்தியதாக தெரிகிறது. அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் மற்றும் திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்த சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் ஒட்டுகேட்பு கருவி விவகாரம் அரசியல் கட்சி தலைவர்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.