ரம்புட்டான் பிரியர்களை பதற வைத்த சம்பவம் nellai shocking incident | Rumbutan fruit courtallam fruits
திருநெல்வேலியின் மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவை சேர்ந்தவர் நிஜாம். இவர் வேலைக்காக வெளிநாட்டில் இருந்தார். நிஜாம் மனைவி, குழந்தை மற்றும் குடும்பத்தினர் மேலப்பாளையத்தில் இருக்கின்றனர். நிஜாமுக்கு 5 வயதில் ரியாஸ் என்ற மகன் இருந்தான். தாத்தா ஷேக் பரீத்துடன் மார்க்கெட்டுக்கு சென்ற சிறுவன், பழக்கடையில் இருந்த ரம்புட்டான் பழத்தை விரும்பி கேட்டான். பேரனுக்காக அவர் ரம்புட்டான் பழங்கள் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார். தோல் நீக்கி விட்டு பழத்தை சிறுவனுக்கு கொடுத்தார். சிறுவனோ பழத்தை விதையுடன் விழுங்கி விட்டான். பழம் அவனது தொண்டையில் சிக்கிக்கொண்டது. விழி பிதுங்கிய சிறுவன் மூச்சு விட முடியாமல் திணறினான். குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். சிறுவனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர். போகும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்தான். அவனை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டான் என்றார். ரம்புட்டான் பழம் சிறுவன் தொண்டையில் சிக்கி மூச்சு குழாய் அடைபட்டதால் அவன் இறக்க நேரிட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் நெல்லை நகரவாசிகளை மட்டும் இன்றி ரம்புட்டான் பிரியர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது. பழங்களிலேயே மிகவும் வித்தியாசமானது ரம்புட்டான். இதன் சுவை அலாதியானது. சிவப்பு, பச்சை, மஞ்சள் கலந்த நிறத்தில், அதன் தோற்றமே சுண்டி இழுக்கும். குறிப்பாக குழந்தைகள், சிறுவர், சிறுமியரின் விருப்பமான பழங்களில் ரம்புட்டானுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த பழத்துக்கு ருசி மட்டும் அல்ல; மருத்துவ குணமும் அதிகம் என்பார்கள். தமிழகத்தை பொறுத்தவரை தென்காசி மாவட்டம் வல்லம் பழ மார்க்கெட் தான், ரம்புட்டானுக்கு பிரதான மார்க்கெட். தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான குற்றாலம், வல்லம், புளியரை எல்லை, மற்றும் கேரள எல்லை பகுதிகளில் அதிகளவில் ரம்புட்டான் விளைகிறது. இங்கிருந்து வல்லம் மார்க்கெட் வரும் ரம்புட்டான் பழங்கள், தென்காசி, நெல்லை மாவட்டங்கள் மட்டும் இன்றி தமிழகத்தின் மற்ற இடங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. ரம்புட்டான் குறிப்பட்ட சீசனில் மட்டுமே கிடைக்கும். பொதுவாக, குற்றாலம் சீசனோடு சேர்ந்து இதற்கான சீசனும் துவங்கும். இப்போது குற்றாலம் சீசன் களை கட்டியுள்ள நிலையில், அங்குள்ள எல்லா பழக்கடைகளிலும் ரம்புட்டான் விற்பனை ஜோராக நடக்கிறது. குற்றாலத்தில் அரிய வகை சீசனல் பழங்கள் நிறைய கிடைக்கும் என்றாலும், அதிகளவில் விற்பனையாவது என்றால் ரம்புட்டான் தான். குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் நிச்சயம் ரம்புட்டான் வாங்காமல் ஊர் திரும்ப மாட்டார்கள். இவ்வளவு டிமாண்ட் இருப்பதால், அதன் விலையும் அதிகம். ஒரு கிலோ 300 முதல் 400 ரூபாய் வரை விற்பனையாகிறது. இப்படி பல மகத்துவம் நிறைந்த ரம்புட்டான் பழத்தை சாப்பிடும் போது, 5 வயது சிறுவன் உயிர் பிரிந்து விட்டது என்பது தான் அதிர்ச்சியாக இருக்கிறது. ரம்புட்டான் சாப்பிடும் போது அதிக கவனம் வேண்டும். ரம்புட்டான் பழத்தின் தோலை நீக்கினால், பார்ப்பதற்கு நொங்கு போன்ற சதை பகுதி இருக்கும். அதன் உள்ளே பேரிச்சம் பழ கொட்டை வடிவில் விதையும் உண்டு. தோலையும், விதையையும் நீக்கி விட்டு நடுவே இருக்கும் சதை பகுதியை மட்டுமே சாப்பிட வேண்டும். ஆனால் தோல் நீக்கியதுமே பழத்தை வாயில் போட்டு குழந்தைகள் சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். வாயில் வைத்தே லாவகமாக சதையை மட்டும் பிரித்து சாப்பிட்டு விட்டு, கொட்டையை துப்பி விடுவார்கள். நெல்லை சிறுவனும் அப்படி தான் சாப்பிட நினைத்திருக்கிறான். ஆனால் எதிர்பாராத விதமாக பழத்தை விடதையுடன் விழுங்கியதால் தொண்டையில் சிக்கி, அவன் இறந்து விட்டான். எனவே தான் சிறுவர்களுக்கு ரம்புட்டான் பழம் கொடுக்கும் போது பெற்றோர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தோலையும், விதை பகுதியையும் நீக்கி விட்டு, சதையை மட்டும் பிரித்து சிறுவர், சிறுமியருக்கு கொடுப்பது நல்லது. எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க இதுவே சிறந்த வழி என்கின்றனர்.