ரத்தன் டாடா மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் rathan tata| tata group
தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட இரங்கலில், ரத்தன் டாடா அனுபவமிக்க தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். தொண்டு மற்றும் சேவை ஆகியவற்றில் அவரது பங்களிப்பு விலைமதிப்பற்றது. அவரது குடும்பத்தினருக்கும், டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும், அவர் மீது பெருமதிப்பு கொண்டவர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி தனது இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது ; ரத்தன் டாடாவுடனான எண்ணற்ற தொடர்புகளால் என் மனம் நிரம்பியுள்ளது. நான் குஜராத் முதல்வராக இருந்தபோது அவரை அடிக்கடி சந்திப்பேன். பல்வேறு பிரச்னைகள் குறித்து நாங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம். அவரது கண்ணோட்டங்கள் எனக்கு மிகவும் செழுமையாக இருந்தன. நான் டில்லிக்கு வந்த பிறகும் இந்த கலந்துரையாடல்கள் தொடர்ந்தன. அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுடன் உள்ளன. ஓம் சாந்தி என குறிப்பிட்டுள்ளார். ரத்தன் டாடா மறைவால் ஆழ்ந்த வருத்தமுற்றேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இந்திய தொழில்துறையின் உண்மையான டைட்டன் மற்றும் பணிவு மற்றும் இரக்கத்தின் கலங்கரை விளக்கமாக விளங்கியவர் ரத்தன் டாடா. இந்தியா ஒரு ஜெயிண்ட்டை இழந்துவிட்டது, ஆனால் அவரது பாரம்பரியம் பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும். இந்த ஆழ்ந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும், ஒட்டுமொத்த டாடா குழுமத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.