பெங்களூரு சம்பவத்துக்கு அதிகார போட்டி காரணம் என பரபரப்பு புகார்! RCB | Bengaluru Incident | Preimie
18 வது பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணி கோப்பை வென்றது. இதற்கான வெற்றி கொண்டாட்டம், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. 35 ஆயிரம் பேர் மட்டுமே அமரக்கூடிய மைதானத்தில் 3 லட்சம் பேர் திரண்டதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசின் சரியான திட்டமிடாத செயலே இறப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடகா ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதில், அரசின் மீது எந்த தவறும் இல்லை என, முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் மாறி மாறி கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் சித்தராமையா, சிவகுமார் இடையிலான அதிகார போட்டியே சம்பவத்துக்கு காரணம் என பத்திரிகையாளர் ராஜ்தீப் கூறிய கருத்து பரபரப்பை கிளப்பி உள்ளது. அவர் பேசியதாவது: நம் நாட்டில் இரு வகை முதல்வர்கள் உள்ளனர். மோடி, மம்தா, நவீன் பட்நாயக், யோகி ஆதித்யநாத் போன்றவர்கள் முதல் வகையை சேர்ந்தவர்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதைத் தான் செய்து முடிப்பார்கள். மீதம் உள்ளவர்கள் இரண்டாவது வகையை சேர்ந்தவர்கள். கர்நாடகாவில் தற்போது இரண்டாவது வகை ஆட்சி தான் நடக்கிறது. அங்கு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இடையே அதிகார போட்டி நடக்கிறது. தனியாருக்கு உரிமையான ஆர்சிபி அணியின் வெற்றியை கர்நாடக அரசு உரிமை கொண்டாட நினைத்தது. சிவகுமார், சித்தராமையா இரு தரப்பினரும் வெற்றியில் உரிமை கொண்டாடினர். சித்தராமையா ஏர்போர்ட் வரை சென்று வீரர்களை வரவேற்றார். கிரிக்கெட் வீரர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க விரும்பினார். இவ்வளவு குறைவான நேரத்தில் வந்த உத்தரவால், கூட்டத்தை எங்களால் கையாள முடியவில்லை என பெங்களூரு போலீசார் கூறுகின்றனர். ஸ்டேடியத்துக்கு முதலில் வருபவர்களுக்கு முன்னிரிமை என்ற அறிவிப்பும் பிரச்னைக்கு காரணமானது. அரசியல் தலைமை எப்போது பலவீனம் அடைகிறதோ, பிளவுபடுகிறதோ அங்கு அனைத்து பிரச்னைகளும், குழப்பங்களும் ஏற்படும். இந்த விவகராத்தில் போலீஸ் உயர் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இன்னும் கொஞ்ச நாளில் இதற்கு சிவகுமார் தரப்பு தான் காரணம் எனவும், சித்தராமையா தரப்பு தான் காரணம் எனவும் இரு தரப்பில் மாறி மாறி புகார் எழுப்புவர். இந்த நிகழ்ச்சிக்கு சிவகுமார் தான் அனுமதி வழங்கியதாக சித்தராமையா தரப்பு கூறியது. சித்தராமையாவின் அரசியல் செயலாளர் தான் அனுமதி வழங்கிதாக சிவக்குமார் தரப்பு கூறியது. சித்தராமையா ஒரு நிகழ்ச்சியை தலைமை தாங்கினால், அதே சமயம் சிவகுமார் மற்றொரு நிகழ்ச்சியை தலைமை தாங்குவதாக அறிவிப்பு வெளியானது. இப்படிப்பட்ட தருணத்தில் போலீஸ் கமிஷனர் என்ன செய்வார்? நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவதில் கூட அதிகார போட்டி நிலவுகிறது. இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை என கமிஷனர் தயானந்த் கூறுகிறார். மொத்தத்தில் கர்நாடக காங்கிரசில் நிகழ்ந்த அதிகார போட்டியே ஒட்டுமொத்த பிரச்னைக்கு காரணமாக அமைந்தது என ராஜ்தீப் கூறினார்.