கோயிலுக்கு வந்த கொள்ளையன்: அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள் | Robbery
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகரில் கடந்த 23ம் தேதி பாண்டித்துரை என்பவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 23 பவுன் நகைகள், 2 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை போனது. வீட்டில் இருந்தவர்கள் மார்க்கெட் சென்று வருவதற்குள் இந்த கொள்ளை சம்பவம் நடந்தது. அதேபகுதியில், ராஜாமணி என்பவர் வீட்டிலும் அதே நாளில் கொள்ளை சம்பவம் நடந்தது. வீட்டு உரிமையாளர்கள் வெளியூர் சென்று இருந்த நிலையில், 16 பவுன் நகை, 15 ஆயிரம் ரொக்கம் பறிபோனது. அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவம் பற்றி போலீசார் விசாரித்தனர். தனிப்படை போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தனர். இந்த கொள்ளையில் ஈடுபட்டது காரைக்குடியை சேர்ந்த டவுசர் கொள்ளையன் சரவணன் என்பதை கண்டுபிடித்தனர். டவுசரும், முகமூடியும் அணிந்து கொண்டு, பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கைவரிசை காட்டுவதில் சரவணன் கில்லாடி. அவன் மீது ஏற்கனவே 15 திருட்டு வழக்குகள் இருக்கின்றன. அவனை தனிப்படை போலீசார் தேடி சென்றனர். ஆனால், சரவணன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று இருப்பது தெரிந்தது. ஒவ்வொரு முறையும் கொள்ளை சம்பவம் வெற்றிகரமாக முடிந்ததும், முருகபெருமானுக்கு நன்றி சொல்லும் விதமாக திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று சரவணன் தரிசனம் செய்வானாம். தனிப்படை போலீசார் திருச்செந்தூரில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சரவணனை மடக்கி பிடித்தனர். கொள்ளையடித்த நகைகள், பணத்தை பறிமுதல் செய்தனர். கொள்ளைக்கு பயன்படுத்திய டவுசர், முகமூடி, இரும்பு கம்பி உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றினர். சில நகைகளை விற்றது தெரியவந்தது. அதற்கு அவனுக்கு உதவிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.