தூத்துக்குடியில் வசமாக சிக்கியது கொள்ளை கும்பல் | Robbery Gang Arrest | Thoothukudi Police
சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் வைர வியாபாரி சந்திரசேகர். இவர் தன்னிடம் இருந்த வைரங்களை விற்க இடைத்தரகர் ஆரோக்கிய ராஜை அணுகியுள்ளார். வைரத்தை வாங்க ராகுல் என்ற நபரை ஆரோக்கிய ராஜ் அறிமுகம் செய்து வைத்தார். இரண்டு நாட்களுக்கு முன் சந்திரசேகர் வீட்டில் வைத்து 17 கேரட் வைரத்திற்கு 23 கோடிக்கு பேரம் பேசி விலையை நிர்ணயம் செய்துள்ளனர். மற்ற விபரங்களை வீட்டில் வைத்து பேச வேண்டாம் என சந்திரசேகரிடம் ராகுல் கூறியதாக தெரிகிறது. ஞாயிறன்று வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வைர வியாபாரி சந்திரசேகர் சென்றுள்ளார். புக் செய்திருந்த அறைக்கு அவர் போன போது அங்கு பதுங்கி இருந்த 4 பேர் கும்பல் சந்திரசேகரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின் அவரை கட்டிப் போட்டு வைரத்தை எடுத்து தப்பிச் சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் சந்திரசேகர் வராததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்துள்ளனர். சோபாவில் கட்டப்பட்ட நிலையில் இருந்த சந்திரசேகரை மீட்டனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக சந்திரசேகர் வடபழனி போலீசில் புகார் கொடுத்தார். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தமிழகம் முழுதும் கொள்ளை கும்பலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்த கும்பல் தூத்துக்குடி செல்வதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து தூத்துக்குடி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கொள்ளை கும்பலை சேர்ந்த ஜான் லாயட் ,விஜய், ரத்தீஷ், அருண் பாண்டியராஜ் இருப்பது தெரியவந்தது அவர்களை கைது செய்த தனிப்படை போலீசார் சிப்காட் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்த தனிப்படை போலீசார் நான்கு பேரை கைது செய்து, கொள்ளையடிக்கப்பட்ட வைரத்தை பறிமுதல் செய்து விசாரணைக்காக சென்னை அழைத்து சென்றுள்ளனர்.