உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முஸ்லிம்கள் பிரச்னைகள் பற்றி கலந்துரையாடிய RSS தலைவர்கள் RSS - Muslim community | Dialogue | Delhi |

முஸ்லிம்கள் பிரச்னைகள் பற்றி கலந்துரையாடிய RSS தலைவர்கள் RSS - Muslim community | Dialogue | Delhi |

முஸ்லிம் மத குருமார்கள், அறிஞர்கள், முஸ்லிம் சமூக பிரபலங்களை ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சந்தித்து பேசும் கலந்துரையாடல் நிகழ்ச்சி டில்லி ஹரியானா பவனில் ஜூலை 24ல் நடந்தது. அகில இந்திய இமாம்கள் அமைப்பின் தலைமை இமாம் உமர் இல்யாசி இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நாடு முழுவதும் இருந்து முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் கலந்துரையாடினர். சுமார் மூன்றரை மணி நேரம் நடந்த இந்த கலந்துரையாடலில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. புல்டோசர் நடவடிக்கைகள், பசு பாதுகாப்பு பெயரில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அதிகரிக்கும் கொலை சம்பவங்கள் போன்ற பல அழுத்தமான பிரச்னைகளை அவர்கள் விவாதித்தனர். ஆர்எஸ்எஸ் அதன் நூற்றாண்டு விழாவையும், அகில இந்திய இமாம் அமைப்பு அதன் 50வது ஆண்டு விழாவையும் கொண்டாடும் நேரத்தில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என அகில இந்திய இமாம் அமைப்பின் தலைமை இமாம் உமர் அகமது இல்யாசி தெரிவித்தார். இந்த சந்திப்பு, இரு தரப்புக்கும் இடையிலான தவறான புரிதல் மற்றும் வெறுப்புகளை முடிவுக்கு கொண்டு வரவும், நம்பிக்கையை வளர்க்கவும், பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் வழி வகுக்கும். கோயில் குருக்கள் மற்றும் மசூதி இமாம்கள் அளவிலும் இது போன்ற கலந்துரையாடலை நடத்த இருக்கிறோம் என்று தலைமை இமாம் உமர் அகமது இல்யாசி கூறினார். ஆர்எஸ்எஸ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள், விவாதங்கள் மூலம் தொடரும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உறுதி அளித்தார்.

ஜூலை 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ