திருப்பரங்குன்றம் மலை மீது அடுத்த அதிர்ச்சி | Samanar Gugai | Thiruparankundram City in Tamil Nadu
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு மதுரை திருப்பரங்குன்றம் மலை. இங்குள்ள சமணர் படுகை, மலைக்கு பின்புறம் கல்வெட்டு குகைகோயில் தொல்லியல் துறை வசம் உள்ளது. இந்துக்கள் புனிதமாக கருதும் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில் சிலர் ஆடு வெட்ட முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதையடுத்து தர்காவில் வழிபட அனுமதி மறுக்கப்படுகிறது எனக்கூறி சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. தர்காவில் வழிபட தடையில்லை. உயிர்பலி கொடுக்கதான் தடை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை பொருட்படுத்தாமல் ஜனவரி 18ல் ஆடு, கோழி வெட்டி சமபந்தி விருந்து கொடுக்க போவதாக கூறி சில முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மலையேற முயன்றனர். அப்போது நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். திருப்பரங்குன்றம் மலை மீது ஏற முயன்றவர்களை தடுத்ததால் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மலையை ஆக்கிரமிக்கும் நோக்கில் சில அமைப்புகள் செயல்பட்டு வருவதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சமணர் குகையை ஆக்கிரமிக்கும் நோக்கில் பச்சை பெயின்ட் அடிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாறையில் பச்சை பெயிண்ட் அடித்து, சில வாக்கியங்களை மர்ம நபர்கள் எழுதியுள்ளனர். இதுகுறித்து மத்திய தொல்லியல் துறை உதவி பாதுகாப்பு அலுவலர் சங்கர் போலீசில் புகார் அளித்தார். பொதுச்சொத்து மற்றும் தொல்லியல் பாதுகாப்பு சட்டப்பிரிவுகளின்கீழ் மர்மநபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.