மாணவிகளிடமும் புகையிலை பயன்பாடு? ஆய்வில் அதிர்ச்சி | Report | School Education | TN Health
மாநில பொது சுகாதார இயக்குநரகம் நடத்திய புதிய ஆய்வில், நாமக்கல் மாவட்ட உயர்நிலை பள்ளி மாணவர்கள் 21 சதவிகிதம் பேர் புகையிலையை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இவர்கள் பெரும்பாலும் 13 வயதில் இருந்தே புகைபிடிக்க ஆரம்பித்துள்ளனர். சென்னை, கோவை போன்ற நகர்ப்புறங்களிலும், சில புறநகர் மாவட்டங்களிலும் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரம் தொகுதியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மொத்தம் 300 மாணவர்களிடம், புகையிலை பயன்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த 300 பேரில் 21 சதவிகிதம் அதாவது 63 மாணவ மாணவிகள் புகையிலை பயன்படுத்தியது தெரியவந்தது. இதில் 51 பேர் மாணவர்கள். 12 பேர் மாணவிகள். இந்த ஆய்வின் போது 9 மாணவர்கள் மட்டுமே புகைப்பழக்கம் இருப்பதை நேரடியாக ஒப்புக்கொண்டனர். மற்ற 42 மாணவர்கள் மற்றும் 12 மாணவிகளிடம் ரசியமாக நேர்காணல் நடத்தப்பட்டதை தொடர்ந்து அவர்கள் தங்களுக்கு புகையிலை பயன்படுத்தும் பழக்கம் இருப்பதை ஒப்புக்கொண்டனர். ஆய்வில் பதில் சொன்ன 63 மாணவர்களில் 48 பேர் பீடி, சிகரெட் அல்லாத புகையிலை பொருள் பயன்படுத்துவதாக கூறியுள்ளனர். எஞ்சிய மாணவர்களில் 12 பேர் சிகரெட் பிடிப்பதும் , 3 பேர் பீடி பிடிப்பதும் தெரியவந்துள்ளது. இந்த 63 பேரில் 5 சதவிகித மாணவர்கள் ஒரு வருடமாகவும், 41 சதவிகிதம் பேர் மூன்று வருடங்களாகவும், 43 சதவிகிதம் பேர் நான்கு ஆண்டுகளாகவும் புகையிலை பழக்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 56 சதவிகிதம் பேர் வாரத்திற்கு ஐந்து முறைக்கு மேல் புகையிலையைப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். 16 சதவிகிதம் மாணவர்கள் வாரத்திற்கு 2-3 முறை புகையிலையைப் பயன்படுத்துவதாகவும், 28 சதவிகிதம் பேர் வாரத்திற்கு 4-5 முறை புகையிலையைப் பயன்படுத்துவதாகவும் கூறினர். ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலான மாணவர்கள் கோவிட் கால கட்டத்தின் போது புகையிலை பயன்படுத்த தொடங்கியதாக கூறினர். இளமைப் பருவத்தில் போதை பழக்கத்திற்கு ஆளாவது நீண்ட காலம் அதற்கு அடிமையாக வழிவகுக்கும். இதனை தடுக்க அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என பொது சுகாதார இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.