தீர்த்து கட்டப்பட்ட டிரம்ப் வலது கரம்: அமெரிக்காவில் உச்சகட்ட பதற்றம் | Charlie Trump supporter
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர் சார்லி கிர்க், வயது 31. இவர் அங்குள்ள பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய போது சுட்டு கொல்லப்பட்டார். முதற்கட்ட விசாரணையில், குற்றவாளி கட்டடத்தின் மறைவான பகுதியிலிருந்து சுட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியானது. சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட காட்சிகளை பார்க்கும் போது, சார்லி கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்க முனைந்தார். அப்போது துப்பாக்கி சுடும் சப்தம் கேட்கிறது. அவ்வளவுதான் சார்லி சுருண்டு விழுகிறார். அந்த இடமே அமளியாகிறது. அப்போது சார்லி கழுத்திலிருந்து ரத்தம் கொட்டுகிறது. அவர் தன்னுடைய மைக்ரோபோனை அழுத்திப் பிடித்தபடி கீழே விழுந்து இறந்துள்ளார். அதற்கு பின் அங்கே என்ன நடந்தது என்பது தெளிவாக இல்லை. விடியோவின் காட்சிகளின் அடிப்படையில் மிக துல்லியமாக அவர் குறிவைக்கப்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது. அனுபவம் வாய்ந்த குற்றவாளி தான் இந்த கொலையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீசார் சொல்கின்றனர். சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளில் கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர், கருப்பு நிற உடையணிந்து இருந்ததாக கூறப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு இதில் தொடர்பில்லை என போலீசார் தெரிவித்தனர். சார்லி மரணத்துக்கு அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இளைஞர்களின் இதயத்தை சார்லியை விட சிறப்பாகப் புரிந்து கொண்டவர் வேறு யாரும் இல்லை. அவர் அனைவராலும் விரும்பப்பட்டார், பாராட்டப்பட்டார். எனக்கும் தனிப்பட்ட முறையில் அவரை பிடிக்கும்.. ஆனால், இப்போது அவர் நம்முடன் இல்லை. அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். சார்லி, நாங்கள் உன்னை நேசிக்கிறோம் என டிரம்ப் கூறியுள்ளார். மேலும் சார்லி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைத்து அமெரிக்க கொடிகளையும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை அரைக்கம்பத்தில் பறக்கவிட உத்தரவிடப்பட்டுள்ளது. டிரம்ப் உருகி உருகி இரங்கல் தெரிவிக்கும் சார்லி 2012ம் ஆண்டிலேயே Turning Point USA என்ற இளைஞர் அமைப்பைத் தொடங்கியவர். இளம் வயதிலேயே அரசியல் ஆர்வம் கொண்டு, குடியரசு கட்சியின் கொள்கைகளுக்காக குரல் கொடுத்தார். குறிப்பாக டிரம்ப் அதிபராக இருந்தபோது, அவரது கொள்கைகளுக்கு ஆதரவாகவும், இளம் வாக்காளர்களை டிரம்ப் பக்கம் ஈர்க்கும் வகையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளையும், விவாதங்களையும் நடத்தி வந்தார். 2024 தேர்தலில் டிரம்ப் அணியின் முக்கிய உறுப்பினராகவும் இருந்தார். இளைஞர்களின் மனதைப் புரிந்துகொள்வதில் சார்லிக்கு நிகர் யாருமில்லை என டிரம்ப் கூறியிருந்தார். சார்லி இஸ்ரேலின் தீவிர ஆதரவாளராகவும் இருந்தார். இதனால்தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவரை இஸ்ரேலின் உண்மையான நண்பர் என அழைத்தார்.