சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க திட்டம்! Sengottaiyan | Ex Minister | ADMK | EPS | OPS
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியை ஒருங்கிணைக்குமாறு பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார். அதைத்தொடர்ந்து, செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வகித்து வந்த பதவிகள் பறிக்கப்பட்டன. இதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில், செங்கோட்டையன் ஆதரவாளர்கள், கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இதற்கிடையே, பழனிசாமியின் அதிரடி நடவடிக்கையை எதிர்பாராத செங்கோட்டையன் அதிர்ச்சி அடைந்து, தடுமாறினார். எனினும், சுதாரித்துக் கொண்டு, அடுத்ததாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தன் ஆதரவாளர்கள் மற்றும் பழனிசாமியால் கட்சியில் இருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ், தினகரனுடன் பேசி, ஆலோசனை கேட்டுள்ளார். அனைவருடனும் பேசிய பின், செங்கோட்டையன் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். விரைவில், தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்களை சந்தித்து, அ.தி.மு.க.வில் தற்போது நிகழும் விஷயங்களை விளக்கமாக எடுத்துச்சொல்லி, தனக்கு ஆதரவு தேட முடிவெடுத்துள்ளார். தன் கருத்துக்கு வலு சேர்ந்ததும், பழனிசாமியிடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்டெடுப்பது சுலபம் என நினைக்கிறார். அ.தி.மு.க.வை பழனிசாமியிடம் இருந்து மீட்கும் சூழலில், சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைத்து ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை உருவாக்கலாம் என்பது அவரது எண்ணம். இதற்கு அம்மூவரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.