திருச்சி தனியார் பள்ளியில் பாலியல் கொடுமை: நடந்தது என்ன? | sexual harassment | Trichy | Pocso act
மாணவர்களுக்கு நடந்த கொடுமை 2 பாதிரியாரை தூக்கிய போலீஸ் அன்பாக பேசி அட்டூழியம் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அரசு உதவி பெறும் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் 110 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். கும்பகோணம் அய்யாவாடியைச் சேர்ந்த பாதிரியார் குழந்தைநாதன் விடுதி வார்டனாக பணிபுரிந்து வருகிறார். குழந்தை நாதனை பார்க்க அவரது நண்பர் சுந்தர்ராஜன் அடிக்கடி வருவதுண்டு. அரியலூரை சேர்ந்த சுந்தர்ராஜன் திருச்சியில் தங்கி பாதிரியாருக்கான பட்டப்படிப்பு படித்து வருகிறார். விடுமுறை நாட்களில் விடுதிக்கு வந்து, வார்டன் குழந்தை நாதன் அறையில் தங்குவது வழக்கம். அப்போது, சுந்தர்ராஜன் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். முதலில் படிப்பு சம்பந்தமாக ஆலோசனை வழங்குவதுபோல, மாணவர்களிடம் பேச்சு கொடுத்துள்ளார். பிறகு, குடும்பம் பற்றி அக்கறையுடன் விசாரிததுள்ளார். நாளடைவில் மாணவர்களிடம் நைசாக பேசி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். சுந்தர்ராஜனின் பாலியல் சீண்டலுக்கு ஆளான மாணவர்கள், ஒரு கட்டத்தில் வார்டன் குழந்தை நாதனிடம் புகார் கூறினர். ஆனால் அவர் நண்பரை தட்டிக் கேட்காமல் அலட்சியமாக இருந்தார். இதனால், விடுதியில் நடக்கும் கொடுமை பற்றி மாணவர்கள் அவர்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல் காந்தி கவனத்துக்கு போனது. அதிகாரி ராகுல் காந்தி விடுதிக்கு வந்து மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். மாணவர்களிடம் சுந்தர்ராஜன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மொத்தம் 7 மாணவர்களிடம் அவர் முறைகேடாக நடந்திருப்பது தெரிய வந்தது. இதுபற்றி லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ராகுல் காந்தி புகார் கொடுத்தார். அதனடிப்படையில் மாணவர்களை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய சுந்தர்ராஜன், அவருக்கு உடந்தையாக இருந்த பாதிரியார் குழந்தை நாதன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுளளது. லால்குடி போலீஸ் நிலையத்தில் இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளியில் நடந்த பாலியல் சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.