ஏமன் அருகே சரக்கு கப்பல் கடத்தல்: 22 இந்தியர்களின் நிலை என்ன?
துருக்கி நாட்டிற்கு சொந்தமான ஆயுதங்கள், தகவல் தொடர்பு சாதனங்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல், சோமாலிய கடல் பகுதியை ஒட்டி பயணித்த போது, அங்கு வந்த கடல் கொள்ளையர்கள் கப்பலை மடக்கினர். பயங்கர ஆயுதங்களுடன் சரக்கு கப்பலில் ஏறிய கடல்கொள்ளையர்கள், அதில் இருந்த மாலுமிகள் உட்பட கப்பல் ஊழியர்களை மிரட்டி, கப்பலை கடத்திச் சென்றனர். கேமரூன் நாட்டை சேர்ந்த கொடியுடன் பயணித்த அந்த சரக்கு கப்பலில், 6 இந்தியர்கள் 4 வெளிநாட்டினர் என மொத்தம் 10 பேர் இருந்தனர். இந்த கப்பல் கடந்த 17ம் தேதி கடத்தப்பட்ட நிலையில், தற்போது ஏமன் கடல் பகுதியை ஒட்டி மீண்டும் ஒரு கப்பலை சோமாலிய கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். எரித்ரியா நாட்டு கொடியுடன் ஏமன் அருகே சென்ற எண்ணெய் கப்பலை, கடல் கொள்ளையர்கள் நேற்றிரவு இடைமறித்து கடத்தினர். இந்த சரக்கு கப்பலில், 16 இந்தியர்கள் உட்பட மொத்தம் 20 பேர் இருந்தனர். இதில் சிரியா, சூடான், ஈராக் நாடுகளை சேர்ந்தவர்களும் இருந்தனர். இந்த கப்பலையும் இதற்கு முன் கடத்தியவர்களே கடத்தினரா, அல்லது வேறு கொள்ளை கும்பலா என்ற விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. கடத்தப்பட்ட கப்பல்களில் உள்ள 22 இந்தியர்களையும் பத்திரமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்களின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர். இரு கப்பல்களிலும் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த மாலுமிகள், ஊழியர்கள் இருப்பதால், அவர்களை மீட்க சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. #ShipHijack #Yeman #Pirates #Somalia #IndianCrewMembers #IndiansHijacked #SomalianPirates #VesselsHijacked