செய்தி சுருக்கம் | 01 PM | 14-12-2024 | Short News Round Up | Dinamalar
#செய்திசுருக்கம் #ShortNews #RoundUp #Dinamalar #modi #annamalai #evkselangovan #evkselangovanpassedaway தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்த இளங்கோவனுக்கு கடந்த மாதம் 11ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை மியாட் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். நுரையீரலில் சளி தொற்று அதிகமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஒரு மாதமாக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இளங்கோவனின் உடல் சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள அவரது வீடு, மற்றும் சத்திமூர்த்தி பவனில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. குடும்பத்தினர் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டவர்களின் அஞ்சலிக்கு பின், நாளை சென்னை ராமாவரத்தில் உள்ள மின்மயானத்தில் இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. 1948 டிசம்பர் 21ல் ஈரோட்டில் இளங்கோவன் பிறந்தார். சென்னை மாநில கல்லூரியில் பி.ஏ., பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். தந்தை சம்பத் மறைவுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1984ல் நடந்த சட்டசபை தேர்தலில், சத்தியமங்கலம் தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக இளங்கோவன் எம்எல்ஏ ஆனார். பின்னர், நடிகர் சிவாஜிகணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியில் சேர்ந்து 1989ல் ஈரோடு பவானி தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். அதன் பின் மீணடும் காங்கிரஸ்க்கு திரும்பினார். 1996ல் லோக்சபா தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் தோற்றார். அதன் பின் 1996 முதல் 2001 வரை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தார். 2004ல் கோபிசெட்டிபாளையம் லோக்சபா தொகுதியில் வென்று, முதல் முறையாக எம்பி ஆனார். அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சர் அவையில் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஆனார். அதன் பின் 2009ல் ஈரோடு, 2014ல் திருப்பூர் லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2014 முதல் 2017 வரை 2வது முறையாக தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். 2019ல் தேனி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டபோது மீண்டும் தோல்வியை தழுவினார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த இளங்கோவனின் மகன் திருமகன், 2023ல் மரணம் அடைந்தார். அத்தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் இளங்கோவன் போட்டியிட்டு வென்றார். இதன் மூலம் 39 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அவர் எம்எல்ஏ ஆனார்.