உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யோகியை புகழ்ந்த பெண் MLA நீக்கம்... பரபரப்பு பின்னணி | pooja pal | atiq ahmed | cm yogi | sp vs bjp

யோகியை புகழ்ந்த பெண் MLA நீக்கம்... பரபரப்பு பின்னணி | pooja pal | atiq ahmed | cm yogi | sp vs bjp

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடக்கிறது. இங்கு அகிலேஷின் சமாஜ்வாடி தான் எதிர்கட்சியாக இருக்கிறது. உத்தரப்பிரதேசம் சட்டசபையில் நடந்த விவாதத்தின் போது, சமாஜ்வாடி எம்எல்ஏ பூஜா பால் பேசிய பேச்சு அம்மாநில அரசியலையே அதிர வைத்தது. முதல்வர் யோகியை அவ்வளவு உயரத்துக்கு தூக்கி வைத்து பூஜா பால் பேசினார். அவர் கூறியது: என் கணவரை யார் கொலை செய்தார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் வேறு யாரும் எனக்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்யாத போது, என் குரலை கேட்ட முதல்வருக்கு நன்றி சொல்கிறேன். பிரயாக்ராஜில் என்னை போல் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு முதல்வர் நீதி வழங்கி இருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் ஜீரோ டாலரன்ஸ் கொள்கையை அவர் கொண்டு வந்தது, ஆதிக் அகமது போன்ற குற்றவாளிகளை கொல்ல வழி செய்தது. இன்று மொத்த மாநிலமும் முதல்வரை நம்பிக்கையுடன் பார்க்கிறது. என் கணவரை கொன்ற குற்றவாளி ஆதிக் அகமதுவை அவர் இப்போது அடக்கம் செய்து விட்டார். அவனை போன்ற குற்றவாளிகளுக்கு எதிராக யாரும் போராடவில்லை. நான் தனியாளாக குரல் எழுப்பினேன். கண்டுகொள்ள யாரும் இல்லை. நான் சோர்வடைய துவங்கிய போது, முதல்வர் யோகி எனக்கு நீதி வழங்கினார் என்று சமாஜ்வாடி எம்பி பூஜா பால் பரபரப்பாக பேசினார். சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ சட்டசபையில் வைத்தே பாஜவை சேர்ந்த முதல்வரை இப்படி புகழ்ந்து தள்ளியது உத்தரப்பிரதேசம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை இப்போது கட்சியில் இருந்து நீக்குவதாக சமாஜ்வாடி கட்சி அறிவித்து விட்டது. பூஜா பாலின் கணவர் ராஜு பால். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏவாக இருந்தவர். பூஜா பாலும் ராஜு பாலும் திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே, ராஜு பால் கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் 2005ம் ஆண்டில் பிரயாக்ராஜில் வைத்து நடந்தது. அரசியல் மோதல் காரணமாக நடந்த இந்த கொலையில் அரசியல்வாதியும் பிரபல தாதாவுமான ஆதிக் அகமது, அவரது தம்பி அஷ்ரப் அகமது பெயர் அடிபட்டது. இதற்கிடையே கொலையின் முக்கிய சாட்சியாக இருந்த உமேஷ் பால் என்பவரை கடந்த 2023ல் சுலேம் சராய் என்ற இடத்தில் வைத்து அதே கும்பல் சுட்டு கொன்றது. இந்த கொலை தொடர்பாக ஆதிக் அகமது மற்றும் அஷ்ரப் அகமதுவை போலீசார் கைது செய்தனர். போலீஸ் பாதுகாப்புடன் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர்கள் 2 பேரையும் பத்திரிகையாளர்கள் போர்வையில் வந்த சிலர் சுட்டு கொலை செய்தனர்.

ஆக 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி