உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சத்ய சாய்பாபாவின் தொண்டுக்கு கிடைத்த அங்கீகாரம் என அறக்கட்டளை பாராட்டு! Sri Sathya Sai Baba | Centen

சத்ய சாய்பாபாவின் தொண்டுக்கு கிடைத்த அங்கீகாரம் என அறக்கட்டளை பாராட்டு! Sri Sathya Sai Baba | Centen

ஆன்மிகத் தலைவரான ஸ்ரீ சத்ய சாய்பாபா, 2011 ஏப்ரல் 24ம் தேதி புட்டபர்த்தியில் மறைந்தார். அவருடைய 100வது பிறந்த நாள், 2026 நவம்பர் 23ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், சத்ய சாய் குளோபல் கவுன்சில் கோரிக்கையை ஏற்று, இந்தாண்டு, ஏப்ரல் 24ம் தேதியை, ஸ்ரீ சத்ய சாய் பாபா நூற்றாண்டு கொண்டாட்ட தினமாக, அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் நேற்று பிரகடனம் செய்தார். இந்த பிரகடனத்தை, சத்ய சாய் குளோபல் கவுன்சில் நிர்வாகிகளிடம், நியூயார்க் மேயர் அலுவலகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை கமிஷனர் திலீப் சவுகான் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மேயர் அலுவலக அதிகாரிகள், சத்ய சாய் குளோபல் கவுன்சில் நிர்வாகிகள் பங்கேற்றனர். பல்வேறு மதத்தினரின் பாரம்பரியங்களை மதிக்கும் மிகப் பெரும் நகராக நியூயார்க் உள்ளது. தற்போது அதில் சத்ய சாய்பாபாவின் பக்தர்களும் இணைகின்றனர். உலகெங்கும் உள்ள மக்களுக்கு தன்னலமில்லா சேவையை, இந்த கவுன்சில் மேற்கொண்டு வருகிறது என, தனது செய்தியில், மேயர் ஆடம்ஸ் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து செயல்படும் ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.ஜே.ரத்னாகர் கூறியதாவது: பகவான் சத்ய சாய்பாபாவின் உலகளாவிய நல்லிணக்கம் மற்றும் ஆன்மிக உணர்வுகளால் ஈர்க்கப்பட்டு, உலகெங்கும் கோடிக்கணக்கானோர், அவருடைய பக்தர்களாக உள்ளனர். உலகின் மிகவும் துடிப்பான மற்றும் பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் நியூயார்க் நகரம், சத்ய சாய்பாபாவின் அறக்கட்டளை மேற்கொள்ளும் பணிகளை அங்கீகரித்துள்ளது. பகவான் சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் தினமாக அறிவித்துள்ளனர். இது பாபாவின் மனியநேய தொண்டுகளுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம், என அவர் கூறியுள்ளார்.

ஏப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை