கடைசி நேரத்திலும் மகன் படத்தை பகிர்ந்து மகிழ்ந்த விமானப்படை வீரர் Jaguar fighter aircraft crash|Indi
ராஜஸ்தானில், இந்திய விமான படைக்கு சொந்தமான ஜாகுவார் போர் விமானம் நேற்று பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது, சுரு மாவட்டம் பானோடா கிராமத்தில் வயலில் விழுந்து வெடித்தது. இதில், விமானப்படையின் 2 பைலட்கள், ஸ்குவாட்ரான் லீடர் லோகேந்தர் சிங் சிந்து, லெப்டினட் ரிஷி ராஜ் சிங் ஆகியோர் உடல் கருகி இறந்தனர். போர் விமான விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடக்கிறது. 32 வயதான ஸ்குவாட்ரான் லீடர் லோகேந்தர் சிங் சிந்து ஹரியானாவை சேர்ந்தவர். கடந்த மாதம் 1ம் தேதிதான் அவரது டாக்டர் மனைவி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். மகனை பார்ப்பதற்காக விடுமுறையில் சென்று இருந்த சிந்து, 10 நாட்களுக்கு முன்புதான் மீண்டும் பணியில் சேர்ந்து இருக்கிறார். மகனுடன் இருந்த கொஞ்ச நாட்களில் அவனை மகிழ்ந்த சிந்து, அடுத்த லீவில் வருவதாக குடும்பத்திடம் சொல்லிவிட்டு சென்றார். ஆனால், 10 நாட்களுக்குள் வந்த அவரது மரண செய்தி குடும்பத்தில் இடியாய் இறங்கியது. போர் விமானத்தில் வழக்கமான பயிற்சிக்கு கிளம்புவதற்கு முன்பு கூட, அப்பா ஜோகிந்தருடன் சிந்து போனில் பேசியிருக்கிறார். தனது மகனின் போட்டோவை குடும்ப வாட்ஸ் ஆப் குரூப்பில் பதிவிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார். உற்சாகத்துடன் பறந்த சிந்துக்கு, அதுவே இறுதிப் பயணமாக மாறிப்போனது. விமானப்படையில் பைலட் ஆக வேண்டும் என்பது சிறு வயதில் இருந்தே லோகேந்தர் சிங் சிந்துக்கு லட்சியமாக இருந்தது. சிந்துவின் சகோதரி அன்ஷியும் விமானப்படையில் பணியாற்றியவர். அவரது கணவர் விங் கமாண்டராக இருக்கிறார். ஜாகுவார் போர் விமானங்கள் 1979 முதல் விமானப்படையில் உள்ளன. கடந்த மார்ச்சில் இருந்து 3 முறை இந்த விமானங்கள் விபத்துகளை சந்தித்து உள்ளன.