விண்வெளியில் இருந்து இந்தியா அழகை வர்ணித்த சுனிதா | Sunita williams | India's view from space | Fir
அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். கடந்த ஆண்டு ஜூலையில் வெறும் 7 நாள் பயணமாக விண்வெளிக்கு சென்றார். அங்கு எதிர்பார்க்காத வகையில் நடந்த சில சம்பவங்களால் 7 நாள் பயணம் என்பது 9 மாத பயணமாக மாறியது. அத்தனை நாட்களும் அவர் சர்வதேச விண்வெளி மையத்திலேயே இருந்து தொடர்ச்சியாக ஆய்வு பணிகளைச் செய்தார். அவருடன் விண்வெளி வீரர் வில்மோரும் சிக்கி இருந்தார். டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் இருவரையும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வரும் பணிகள் வேகமெடுத்தது. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் மார்ச் 19ல் இருவரும் பூமிக்கு அழைத்து வரப்பட்டனர். பூமி திரும்பிய அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. 10 நாட்களாக ஓய்வில் இருந்த சுனிதா வில்லியம்ஸ், பூமி திரும்பிய பின் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார். விண்வெளியில் இருந்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். விண்வெளியில் இருந்து பார்த்தபோது இந்தியா எப்படி இருந்தது என்ற கேள்விக்கும் சுனிதா பதில் அளித்தார். விண்வெளியில் இருந்து இந்தியாவை பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் நாங்கள் இமயமலைக்கு மேல் வரும்போது புட்ச் அருமையான போட்டோக்களை எடுத்துள்ளார். இமயமலை இந்தியாவுக்குள் வழிந்தோடுவதுபோல் ஒரு வியத்தகு காட்சியை கண்டு களித்தோம். மும்பையில் இருந்து குஜராத் வரை இரவில் ஒளிர்ந்த மின் விளக்குகள் பிரம்மாண்டமாக காட்சியளித்தன. இரவிலும் பகலிலும் நம்ப முடியாத வகையில் பிரம்மிக்க வைப்பது இமயமலை தான் என்றார்.