நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு! | T20 world cup winning team meets modi
உலககோப்பையை மோடியிடம் காட்டி வாழ்த்து பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! டுவென்டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடந்தது. கடந்த மாதம் 29ம் தேதி பர்படாசில் நடந்த இறுதிப் போட்டியில், இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தி உலகக்கோப்பை வென்றது. 2011ல் 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. 13 ஆண்டுகள் கழித்து டுவென்டி 20 உலகக் கோப்பை வென்று சாதித்துள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா கோப்பையை வாங்க, ஆட்ட நாயகன் விருது விராட் கோலிக்கும், தொடர் நாயகன் விருது பும்ராவுக்கும் கிடைத்தது. வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணிக்கு, டில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, இந்திய வீரர்களை வரவேற்றார். ப்ரீத் வெற்றிக் களிப்பில், ரசிகர்களுடன் ரோஹித் சர்மா ஆட்டம் போட்டார். ஐடிசி ஓட்டலில் ஓய்வெடுக்க சென்ற வீரர்களுக்கு அங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓட்டல் நிர்வாகம் சார்பில் உலகக் கோப்பை மாதிரியில் பிரத்யேக கேக் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி கேக் கட் செய்தார். அனைத்து வீரர்களும் ஓட்டல் ஊழியர்களுக்கும் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தனர். அங்கிருந்து பஸ்சில் கிளம்பிய வீரர்கள், டில்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து உலகக் கோப்பையை பிரதமரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.