உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மும்பை தாக்குதல் சம்பவம்: துபாய்க்கு தொடர்பு அம்பலம்

மும்பை தாக்குதல் சம்பவம்: துபாய்க்கு தொடர்பு அம்பலம்

பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக படகில் மும்பைக்குள் ஊடுருவிய 10 லஷ்கர்- இ-தொய்பா பயங்கரவாதிகள் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பை ரயில் நிலையம், தாஜ் ஓட்டல், யூத வழிபாட்டுதலம் உள்ளிட்ட பல இடங்களில் ஒரே நேரத்தில் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். மும்பை தாக்குதல் சம்பவம் 3 நாட்களுக்கு நீடித்தது. 9 பயங்கரவாதிகளை அப்போதே பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றனர். உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப், தூக்கிலிடப்பட்டான். இந்த சம்பவத்தில் முக்கிய பங்கு வகித்த பயங்கரவாதிகள் டேவிட் ெஹட்லி, தஹாவூர் ராணா ஆகியோரை அமெரிக்காவில் FBI அதிகாரிகள் 2009ல் கைது செய்தனர். டேவிட் ெஹட்லிக்கு 35 ஆண்டு சிறை தண்டனையும், தஹாவூர் ராணாவுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. பல வியாதிகளால் பாதிக்கப்பட்டிருந்த ராணாவை 2020லேயே அமெரிக்க அரசு விடுதலை செய்தது. அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரிப்பதில் மத்திய அரசு முனைப்பு காட்டியதால் அமெரிக்க அரசு அவரை மறுபடியும் கைது செய்து சிறையில் அடைத்தது. அதிபர் டிரம்ப்பை கடந்த பிப்ரவரியில் சந்தித்த பிரதமர் மோடி ராணா நாடு கடத்தலை விரைவுபடுத்த கேட்டுக் கொண்டார். அதன் பலனாக, ராணாவை அமெரிக்கா 3 தினங்களுக்கு முன் இந்தியாவுக்கு நாடு கடத்தியது. இடுப்பு மற்றும் கால்களில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமெரிக்க அதிகாரிகள் ராணாவை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தனி விமானத்தில் வியாழக்கிழமை இரவு டில்லிக்கு அழைத்து வரப்பட்ட ராணாவை டில்லி ஏர்போர்ட்டில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தல், பயங்கரவாத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின்கீழ் ராணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ராணாவை 18 நாள் காவலில் விசாரிக்க என்ஐஏவுக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். டில்லியில் உள்ள என்ஐஏ தலைமையகத்தில் ைஹ செக்யூரிட்டி செல்லில் ராணா அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணாவை டில்லிக்கு கொண்டு வரும் அதே நாளிலேயே பாகிஸ்தான் அலறியடித்துக் கொண்டு தன்னிலை விளக்கம் அளித்தது. ராணாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; அவர் கனடா நாட்டு குடிமகன் ஆகிவிட்டார் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கூறியது. ஆனால் சம்பந்தம் இருக்கிறதா? இல்லையா? என்பது விசாரணை நடத்திய பிறகுதான் தெரிய வரும் என, என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பரபரப்பான சூழலில், ராணாவிடம் நடத்திய விசாரணையில் மிக முக்கியமான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. பாகிஸ்தான் ராணுவத்தில் டாக்டராக இருந்த ராணா, 1997 ல் கனடாவில் குடியேறினார். 2001ல் குடியுரிமை பெற்றார். இறைச்சி வியாபாரம், இமிக்ரேஷன் சேவை மையம் உள்ளிட்ட பல தொழில்களை கனடா, அமெரிக்காவில் செய்துள்ளார். தனது இமிக்ரேஷன் சேவை மையத்தை மும்பையிலும் அவர் துவங்கினார். அந்த மையத்தின் அதிகாரியாக பால்ய சினேகிதன் டேவிட் ெஹட்லியை நியமித்தார். அதை பயன்படுத்திதான் டேவிட் ெஹட்லி மும்பையில் வேவு பார்க்கும்வேலையை செய்தார். பல இடங்களின் போட்டோ, வீடியோவை எடுத்து பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் அமைப்பினருக்கு அனுப்பி வைத்தார். டேவிட் ெஹட்லி பார்க்க அமெரிக்கர் போலவே இருப்பார். அதனால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. ப்ரீயாக இந்தியாவின் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளார். மும்பை தாக்குதல் நடந்த 2008ம் ஆண்டில் ராணாவும், அவர் மனைவி சம்ராசும்கூட மும்பை, டில்லி, ஆமதாபாத், கொச்சி, ஆக்ரா, ஹாப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வந்துள்ளனர். மும்பை தாக்குதலைப் போல அவர்கள் வேறு நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வேவு பார்த்தார்களா? எனவும் விசாரணை நடத்தப்படுகிறது. இந்திய வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக மும்பை தாக்குல் கருதப்படுகிறது. அதில் துபாய்க்கும்கூட தொடர்பு இருந்திருப்பது ராணாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிவந்த இன்னொரு முக்கிய தகவல். ஆமாம்.. துபாயை சேர்ந்த ஒரு மர்ம நபருக்கு மும்பையில் தாக்குதல் நடக்கவிருப்பது பற்றி முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. மும்பை தாக்குதல் நடந்த 2008 நவம்பர் 26க்கு முன், ராணா துபாய்க்கு சென்றார். அந்த மர்ம நபரை சந்தித்து பேசியிருக்கிறார். அந்த நபர் யார்? அவர்கள் என்ன பேசினார்கள்? என்ற விவரங்கள் வெளியாகவில்லை. துபாய் மர்ம நபர் யார் யாருடனெல்லாம் தொடர்பில் இருந்தார்? என என்ஐஏ தோண்டித் துருவுகின்றனர். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயில் யாருடனாவது தொடர்பில் இருந்தாரா? அல்லது பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தாரா? அல்லது லஷ்கர் இ தொய்பா அமைப்பினருடன் தொடர்பில் இருந்தாரா? என விசாரணை நடந்து வருகிறது. மும்பை தாக்குதலில் துபாய் மர்ம நபரின் பங்கு என்ன? டேவிட் ெஹட்லி, தஹாவூர் ராணா இந்தியாவுக்கு வந்து வேவு பார்த்து விட்டுச் சென்றதைப் போல, துபாய்க்காரரும் இந்தியாவுக்கு வந்தாரா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துபாய் மர்ம நபரை பொறுத்தவரையில் என்ஐஏ அதிகாரிகளுக்கு ஒரு விஷயம் புரியாத புதிராக இருக்கிறது. மும்பை தாக்குதல் நடந்து 17 ஆண்டுகள் முடிந்து விட்டன. மும்பை தாக்குதல் பற்றி இந்தியாவிலுள்ள பல புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தியிருக்கின்றன. ஆனால், துபாய் நபரை பற்றிய ஒரு தகவலும் இதுவரை வெளிவராத வகையில் மூடி மறைக்கப்பட்டிருப்பது என்ஐஏ அதிகாரிகளுக்கு புரியாத புதிராக இருக்கிறது. ராணா தொடர்பான ஃபைல்களை அமெரிக்க அதிகாரிகள் என்ஐஏ அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். அதில், துபாய்க்கு சென்று மர்ம நபரை ராணா சந்தித்தது பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த துபாய் நபர் யார்? மும்பை தாக்குதலில் அவர் பங்கு என்ன? என்பதை கண்டுபிடிப்பதுதான் தங்களது முக்கியமான முதல் வேலை என, என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதி தஹாவூர் ராணாவிடம் ஐஜி ஆஷிஷ் பாத்ரா, டிஐஜி ஜெயா ராய் ஆகியோர் தலைமையில் 12 என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். ஆஷிஷ் பாத்ரா, ஜெயரா ராய் இருவருமே ஜார்க்கண்ட்டில் இருந்து ஐபிஎஸ் அதிகாரிகள் ஆனவர்கள். பயங்கரவாத வழக்கு விசாரணைகளில் அனுபவம் மிக்கவர்கள். தஹாவூர் ராணாவின் என்ஐஏ காவல் வரும் 28 ம்தேதி நிறைவடைகிறது. ஆஷிஷ், ஜெயா தலைமையிலான என்ஐஏ டீம்கள் நடத்தும் விசாரணையில் இன்னும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி