தமிழகத்தில் நாளை எங்கெங்கு மழை பெய்யும்: வானிலை மையம் முக்கிய அப்டேட்
#TNRain #TamilnaduRainNews #TNRainNews #RainUpdate #IMDChennai #IMD தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமாக காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (செப்டம்பர் 1ம் தேதி) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், திருச்சி, அரியலுார், பெரம்பலுார், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரியிலும் நாளை மழைக்கு வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். தென்மேற்கு வங்கக் கடலின் தெற்கு பகுதி, வடக்கு ஆந்திர கடலோர பகுதி, அந்தமான் கடல் பகுதியில், மணிக்கு 65 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசும். மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடலிலும் சூறைக்காற்று வீசும் என்பதால், இப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகம், புதுவையில் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை பெய்யும் இயல்பான மழை அளவை விட இம்முறை 22 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளதாக வானிலை மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.