தமிழகத்தை விட்டு ஓடும் தொழில் முதலீடுகள் | Investment | MNC Company | Andhra
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. தென்னிந்தியாவின் தொழில் மையமாக ஆந்திராவை மாற்றுவதில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்துகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஏசி நிறுவனமான கேரியர் குளோபல், சென்னையை மையமாக கொண்டு, தென்னிந்தியாவில் தன்னுடைய முதல் ஆலையை அமைக்க திட்டமிட்டது. ஆனால் சென்னைக்கு அருகே, ஆந்திர எல்லையான ஸ்ரீசிட்டியில் தற்போது ஆலை அமைக்க இந்நிறுவனம் முன்வந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில், கேரியர் குளோபல், 1,000 கோடி ரூபாயை அங்கு முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. தென்கொரியாவை சேர்ந்த எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், தமிழகம் அல்லது கர்நாடகாவில் ஆலை அமைக்க திட்டமிட்டிருந்தது. விரைவான நிலம் ஒதுக்கீடு, உடனடி ஒப்புதல் காரணமாக ஆந்திரா முந்தி கொண்டு 5,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து உள்ளது. இது தவிர, ஸ்ரீசிட்டியில் எல்.ஜி.,எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்த நிறுவனங்கள், 2,000 கோடி ரூபாயை முதலீடு செய்து ஆலைகள் அமைக்க உள்ளன. தெலுங்கானாவின் சீதாராம்புர் தொழில் பூங்காவில் 1,700 கோடி ரூபாய் முதலீட்டில், பிரீமியர் எனர்ஜிஸ் நிறுவனம் 4 ஜிகாவாட் திறன் கொண்ட சோலார் பேனல் செல் உற்பத்தி ஆலை அமைக்க திட்டமிட்டது. தற்போது அதுவும் ஆந்திராவின் நெல்லுாரில் உள்ள நாயுடுபேட்டா தொழில் பூங்காவுக்கு இடம் மாறி உள்ளது.