டாஸ்மாக் வழக்கை இனி ஐகோர்ட்டே விசாரிக்க உத்தரவு! TASMAC CASE | High Court | Supreme Court
தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக் மாநிலம் முழுவதும் மது கொள்முதல் மற்றும் விற்பனை செய்கிறது. தமிழக சுங்கவரி மற்றும் மது விலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் இந்த நிறுவனம் செயல்படுகிறது. கடந்த மார்ச் 6 முதல் 8 தேதி அமலாக்க துறை அதிகாரிகள் சென்னை எக்மோரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், அம்பத்தூர் டாஸ்மாக் கிடங்கு, மது சப்ளை செய்யும் நிறுவனங்களின் அலுவலகங்கள் என 25 இடங்களில் சோதனை நடத்தினர். டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு நிலைகளில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை மார்ச் 13ல் அறிக்கை வெளியிட்டது. அமலாக்க துறையின் நடத்திய சோதனையை சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை விசாரிக்க தடை விதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டு தமிழக அரசு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. நீதிபதிகள் ரமேஷ், செந்தில்குமார் அடங்கிய அமர்வு நீதிமன்றம் வழக்கை விசாரித்து மேற்கொண்டு விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தது. பின்னர் அந்த நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகிக் கொண்டனர். இதனால் நீதிபதிகள் சுப்பிரமணியம், ராஜசேகர் அடங்கிய அமர்வு நீதிமன்றம் முன்பு விசாரணை நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 8 மற்றும் 9 தேதிகளில் நடக்கும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில் இந்த வழக்கை வேறு கோர்ட் விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பிலும், டாஸ்மாக் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு நீதிமன்றம் இன்று விசாரித்தது. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் கோரிக்கை குறித்த விசாரணை நடப்பதற்கு முன், ஏற்கனவே அறிவித்தபடி ஐகோர்ட் இந்த வழக்கில் இறுதி விசாரணை நடத்தியது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எட்வின் பிராபகர் இந்த வழக்கை வேறு மாநில ஐகோர்ட் விசாரிக்க கோரி மனு செய்திருக்கிறோம். அந்த வழக்கு விசாரணை இன்று நடக்க இருக்கிறது. அது நடந்து முடியும் வரை ஐகோர்ட் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கு கண்டனம் தெரிவித்து நீதிபதி சுப்பிரமணியம் கூறியதாவது: கடந்த விசாரணையின்போது அரசின் ஒப்புதலுடன்தான் இறுதி விசாரணை தேதிகள் அறிவிக்கப்பட்டன. இப்போது ஐகோர்ட்டுக்கு தெரிவிக்காமலே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளீர்கள். இது குறித்து அரசு ஏன் முன்பே தெரிவிக்கவில்லை?. சொல்லக்கூடாது என அரசை எது தடுத்தது.? தமிழக அரசு என்ன நினைக்கிறது ? இதை முன்பே சொல்லி இருந்தால் இந்த வழக்கை இன்றைய தேதிக்கு பட்டியலிட்டிருக்கவே மாட்டோம். எங்கள் முன்பு நிறைய வழக்குகள் உள்ளன. அவற்றை தீர்க்க முடியாமல் போராடிக்கொண்டு இருக்கிறோம். தமிழக அரசின் வழக்கை விசாரிக்க நேரம் கொடுத்த போதிலும், அரசு எங்களிடம் தெரிவிக்காமலே சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்திருக்கிறது. இது ஐகோர்ட்டை அவமதிக்கும் செயல். அரசு பொது நலனுக்காக சுப்ரீம் கோர்ட் போயிருக்கிறதா அல்லது டாஸ்மாக் அதிகாரிகளை காப்பாற்ற செயல்படுகிறதா? குறைந்தபட்சம் நீங்கள் நீதிமன்றத்துக்காவது நேர்மையுடன் இருக்க வேண்டும் என நீதிபதி சுப்பிரமணியன் கூறினார். அப்போது குறுக்கிட்ட அரசு வக்கீல் எட்வின் பிரபாகர் ஐகோர்ட்டை அவமதிப்பது அரசின் நோக்கம் இல்லை. பொது நலனுக்குத்தான் அரசு சுப்ரீம்கோர்ட் சென்று உள்ளது என கூறினார். நாங்கள் விசாரிக்க கூடாது என சுப்ரீம் கோர்ட் சொன்னால் ஒழிய எங்களுக்கு அது பற்றி கவலை இல்லை என கூறி நீதிமன்றம் வழக்கை, சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காக ஒத்தி வைத்தது. அந்த சமயம் சுப்ரீம் கோர்ட் தமிழக அரசின் மனுவை விசாரித்தது. டாஸ்மாக் விவகாரத்தை ஐகோர்ட்டே விசாரித்து முடிவு செய்யலாம். சுப்ரீம் கோர்ட் விசாரிக்க தேவையில்லை என நீதிமன்றம் கூறியதை அடுத்து, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து இனி இந்த வழக்கை ஐகோர்ட்டே முழுவதுமாக விசாரிக்க உள்ளது.