மதுரை மாநகராட்சியில் நடந்த மெகா ஊழல் அம்பலம் |Tax collection| ₹150 crore fraud|Madurai corporation
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் 3 லட்சத்திற்கும் அதிகமான தனியார் கட்டடங்களுக்கு வரி விதிப்பு, வரி வசூல் பணிகள் ஆன்லைனில் நடக்கிறது. புதிய கட்டடங்களுக்கு அவை அமைந்துள்ள பகுதிக்கு ஏற்ப வரி விதிக்கின்றனர். ஒரு முறை வரி விதித்தால் பின்னர் கோர்ட் உத்தரவு அல்லது மாநகராட்சி கூட்ட தீர்மானம் அடிப்படையில் தான் வரிவிதிப்பை குறைக்க முடியும் என்பது விதி. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் மண்டலங்கள் 2, 3, 4, 5ல் ஆயிரக்கணக்கான கட்டடங்களுக்கு விதிகளை மீறி குறைவாக வரி நிர்ணயம் செய்துள்ளனர். 2024ல் தினேஷ்குமார் கமிஷனராக இருந்தபோது இந்த முறைகேட்டை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார். ஆனால் அதன்பிறகும் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கூட்டணியில் முறைகேடுகள் தொடர்ந்தது. வரிவிதிப்பு அனுமதி அளிக்கும் அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை தவறாக பயன்படுத்தியது தெரிந்தது. அதிலும் மண்டலம் 2,3,4ல் தான் இந்த முறைகேடுகள் அதிகம் நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. உதவி கமிஷனர்கள் குழு விசாரணையில் 150 கோடி ரூபாய் வரை வரி மோசடி நடந்திருப்பது உறுதியானது. இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சித்ரா உத்தரவின்பேரில் சைபர் கிரைம், குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.